கூவத்தூரில் நடந்ததை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பேன் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
கூவத்தூரில் நடந்ததை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பேன் என நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
பூந்தமல்லி,
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த மாதம் 16-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு போலீஸ் துணை கமிஷனர் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவதூறாக பேசினார்.
இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். கடந்த வாரம் கருணாஸ் ஜாமீனில் வெளியே வந்தார் இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி நடிகர் கருணாசை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார்.
பின்னர் கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன். நான் அரசியல்வாதி இல்லை, சமுதாயவாதி. கூட்டணி கட்சி தலைவர் என்ற மரியாதை கூட கொடுக்காமல் கண்ணியமின்றி பேசுகிறார்கள். இதனால் கோபத்துக்கு ஆளாகியுள்ள எங்கள் சமுதாய மக்கள் வருகிற தேர்தலில் தங்கள் கோபத்தை காண்பிப்பார்கள்.
நாங்கள் போஸ்டர் ஒட்டினால் உடனே வழக்கு போடுகிறார்கள். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அண்ணா சாலை முழுவதும் அனுமதி பெற்று தான் பேனர்கள் வைத்தார்களா? போலீசார் ஏன் முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்கள் மீது வழக்கு போடவில்லை? உங்களுக்கு ஒரு சட்டம், ஊருக்கு ஒரு சட்டமா?
கூவத்தூரில் நடந்ததை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கூறுவேன். அதனால் என் உயிர் போகும் என்றால் போகட்டும். நடிகர் சிவாஜி கணேசன் சிலையை சென்னையில் முக்கிய சாலைகளில் நிறுவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. கூறும்போது, “பழிவாங்கும் நோக்கத்துடன் கருணாஸ் மீது பொய் வழக்கு போடுகின்றனர். உண்மையை பேசியதால் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். இது தொடர்ந்தால் எங்கள் நடவடிக்கை கடுமையாக இருக்கும்” என்றார்.
Related Tags :
Next Story