சென்னையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் சிலை ஊர்வலம் 16-ந்தேதி நடக்கிறது
சென்னையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசனம் செய்தனர்.
சென்னை,
சென்னையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசனம் செய்தனர். விநாயகர் சிலை ஊர்வலம் வருகிற 16-ந்தேதி நடக்கிறது.
இந்துக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களாலும் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி மிகவும் முக்கியமானது. முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்த, ஆவணி வளர்பிறை சதுர்த்தி நாளே விநாயகர் சதுர்த்தியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல விதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
விநாயகர் கோவில்களில் மின் விளக்கு அலங்காரம், தோரணம் என விநாயகர் சதுர்த்தியால் சென்னை நகரமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.
பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு, கோலத்தின் நடுவில் மாட்டு சாணத்தை விநாயகர் போன்று வடிவமைத்து அதன் மேலே அருகம்புல்லை வைத்திருந்தனர். குழந்தைகளுடன் கடைவீதிக்கு வந்த பெண்கள் சிறிய வகை களிமண் பிள்ளையார் சிலைகளை பூஜைக்காக தங்கள் வீட்டிற்கு வாங்கி சென்றனர். மேலும் பூஜைக்குரிய பொருட்களான மாவிலை, தோரணம், பழங்கள், அருகம்புல், அரளி, எருக்கம் பூ போன்றவற்றை வாங்கி சென்ற காட்சிகளை பார்க்க முடிந்தது. சுண்டல், கொழுக்கட்டை, அப்பம், வடை மற்றும் லட்டு ஆகியவற்றை விநாயகருக்கு படைத்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.
திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரர் பேட்டை வீர விக்னேஸ்வரர் கோவில், சிந்தாதிரிப்பேட்டை நவசக்தி விநாயகர் கோவில் மற்றும் சென்னை மயிலாப்பூர், தியாகராயநகர், கொடுங்கையூர், பெரம்பூர், செங்குன்றம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விநாயகருக்கு பால், தயிர், பழங்கள் மற்றும் திருநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் 2,500 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இந்து முன்னணி சார்பில் சிறிய மற்றும் பெரிய சிலைகள் என 5 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பிலும், பல இடங்களில் குடியிருப்போர் சங்கம் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
தெருக்கள், வீதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பஜனை நடைபெற்று வருவதால், தெருக்கள் திருவிழா போல் களை கட்டியுள்ளது. ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்வான விநாயகர் சிலை ஊர்வலம் வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து, பூஜையை பக்தர்கள் நிறைவு செய்வார்கள்.
இதுகுறித்து இந்து முன்னணி சென்னை மாநகர அமைப்பாளர் ஏ.டி.இளங்கோவன் கூறியதாவது:-
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை சென்னையின் பல பகுதிகளில் நாங்கள் வைத்திருக்கிறோம். எம்.ஜி.ஆர். நகரில் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
வருகிற 16-ந்தேதி மதியம் 1.30 மணிக்கு இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடைபெறும். திருவல்லிக்கேணியில் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கலந்து கொள்வார். இது தவிர சென்டிரல் முத்துசாமி பாலத்தில் இருந்தும், வள்ளுவர்கோட்டத்தில் இருந்தும் ஊர்வலம் தொடங்க இருக்கிறது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story