பயணிகள் சேவையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த வைகை எக்ஸ்பிரஸ்
பயணிகள் சேவையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த வைகை எக்ஸ்பிரஸ்
சென்னை,
பயணிகள் சேவையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சுதந்திர தினத்தன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறது. 1977-ம் ஆண்டிலேயே 105 கி.மீ. வேகத்தில் சென்ற அதிவிரைவு ரெயில் இதுவாகும்.
தமிழகத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றைக்கு அதிகம் இயக்கப்பட்டு வந்தாலும், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தனி சிறப்புகள் உண்டு. மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் இந்த ரெயில் 1977-ம் ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது.
ரெயில் பெட்டிகள் அப்போது மஞ்சள் மற்றும் பச்சை வர்ணம் பூசப்பட்டிருந்தன. கனடா நாட்டில் தயாரிக்கப்பட்ட 1,850 குதிரைதிறன் கொண்ட ‘ஒய்.டி. எம்.4.ஏ’ என்ற டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த காலத்திலேயே மீட்டர்கேஜ் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்றது.
இந்த ரெயிலை இயக்குவதற்காகவே வேம்படையான், வெங்கடாசலம் என்ற 2 டிரைவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் அதிவேகமாக (மணிக்கு 100 கி.மீ.) சென்ற ராஜஸ்தான்-டெல்லி ‘பிங்க் சிட்டி’ எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முடிந்ததும் மதுரை திரும்பிய அவர்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை நீராவி என்ஜினில் சோதனை செய்தபோது வேகம் கிடைக்காததால் டீசல் என்ஜினை பொருத்தி மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் இயக்கினர். எனவே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தனது முதல் பயணத்தை டீசல் என்ஜினுடனேயே தொடங்கியது. இதற்கான அனுமதியை ‘லோகோ’ இன்ஸ்பெக்டர் சேவியர் வழங்கினார்.
ரெயிலில் தலா 8 முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளும் இணைக்கப்பட்டிருந்தன. ரெயிலை வேம்படையான், வெங்கடாசலம் ஆகிய இருவரும் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் இயக்கி புதிய சாதனை படைத்தனர். அவர்களைப்போல பால்டேவிட் சாம் உள்பட 6 பேர் கொண்ட டிரைவர் குழுவினர் ஷிப்டு முறையில் அந்த ரெயிலை இயக்கினர். இன்றைக்கும் அதே 105 கி.மீ. வேகத்திலேயே இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட ஏ.சி. பெட்டி முதல் முறையாக 1984-ம் ஆண்டு இந்த ரெயிலில் தான் இணைக்கப்பட்டது. தெற்கு ரெயில்வேயில் நவீன ஜன்னல், கண்ணாடி ஜன்னல், டியூப்-லைட் போன்ற வசதிகளும் இந்த ரெயிலில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதிக திறன்கொண்ட முதல் என்ஜின் இந்த ரெயிலில் தான் பொருத்தப்பட்டது. 1980-ம் ஆண்டில் 2 குழல் கொண்டு ஒலியை எழுப்பும் ‘ஹாரன்’கள் இந்த ரெயிலில் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது.
வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை அப்போது இயக்கிய டிரைவர்களில் பால்டேவிட் சாம், ‘லோகோ’ இன்ஸ்பெக்டர் சேவியர் ஆகியோர் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்தநாள் ஞாபகங்கள் குறித்து 85 வயதை கடந்த பால்டேவிட் சாம் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
1970-ம் ஆண்டுகளில் தமிழக ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 70 முதல் 75 கி.மீ. தான் இருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் தான் வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் ‘டோக்கன் சிக்னல்’ முறைதான் இருந்தது. டென்னிஸ் பேட் வடிவில் இருக்கும் டோக்கனை ஒரு ரெயில் நிலையத்தை ரெயில் கடக்கும்போது டிரைவர் தூக்கி எறிந்துவிட்டு, அந்த ரெயில் நிலையத்தில் வேறொரு டோக்கனை ஓடும் ரெயிலில் நின்றபடியே வாங்கிச்செல்ல வேண்டும்.
ஆனால் வேகமாக செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அது முடியாது என்பதால், இதற்காகவே என்ஜினில் நவீனகருவி பொருத்தப்பட்டிருக்கும். இன்னும் குறைந்த நேரத்திற்குள்ளாகவே மதுரை-சென்னை இடையே இந்த ரெயிலை இயக்க முடியும். அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் ரசிகர் சென்னையை சேர்ந்த அருண் பாண்டியன் கூறும்போது, “சேத்துப்பட்டு பாலத்தில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் அசுரவேகத்தில் புழுதியை கிளப்பிக்கொண்டு செல்வதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கும். இந்த ரெயிலின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் எனது நண்பரும், இந்த ரெயிலின் முதல் டிரைவர் குழுவில் உள்ளவருமான பால்டேவிட் சாமின் மகன் கிறிஸ்டோபருடன் இணைந்து மதுரை ரெயில் நிலையத்தில் ‘கேக்’ வெட்டி கொண்டாடுவது வழக்கம். அன்றைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் இருந்த மஞ்சள் - பச்சை நிறத்திலேயே மீண்டும் வர்ணம் பூச வேண்டும் என்பது எங்கள் ஆசை” என்றார்.
Related Tags :
Next Story