சாலையை கடந்தபோது 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி கர்ப்பிணி பலி


சாலையை கடந்தபோது 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி கர்ப்பிணி பலி
x
தினத்தந்தி 21 July 2018 10:15 PM (Updated: 21 July 2018 8:58 PM)
t-max-icont-min-icon

திரிசூலத்தில் சாலையை கடந்தபோது 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கர்ப்பிணி பலியானார்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த கொளப்பாக்கம் நெடுங்குன்றத்தை சேர்ந்தவர் ஜாஸ்மின் (வயது 25). சென்னை விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தார்.

இவரது கணவர் சதீஷ்குமார்(29). இருவரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஜாஸ்மின் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

நேற்று மாலை விமான நிலைய உணவகத்தில் பணிமுடிந்ததும் திரிசூலம் நோக்கி சாலையில் நடந்து சென்றார். அப்போது மீனம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக ஜாஸ்மின் மீது மோதியது.

இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஜாஸ்மின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கைது

மேலும், இரண்டாவதாக வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பல்லாவரத்தை சேர்ந்த நாகராஜ்(49) என்பவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அழகு, சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ஆகியோர் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் நாகராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரை கைது செய்யவில்லை. மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த வினோத்(29) என்பவரை மட்டும் கைது செய்தனர். 

Next Story