ஐ.ஐ.டி.யில் பட்டமளிப்பு விழா 2 ஆயிரத்து 267 மாணவ, மாணவிகளுக்கு பட்டம்
சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 267 மாணவ- மாணவிகளுக்கு நிதி ஆயோக் துணைத்தலைவர் பட்டம் வழங்கினார்.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி.யில் 55-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் கலந்துகொண்டு 2 ஆயிரத்து 267 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
ஜனாதிபதியின் பெயரில் உள்ள பரிசு உள்பட 3 பரிசுகளையும், பட்டத்தையும் மாணவர் ராகுல் கெஜ்ரிவால் பெற்றார். கவர்னர் பெயரில் பரிசு உள்பட 2 பரிசுகளையும், பட்டத்தையும் மாணவர் கிரிதர் ஸ்ரீராமன் பெற்றார்.
விழாவில் நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ்குமார் பேசியதாவது:-
பட்டம் பெற்ற நீங்கள் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி பாதையில் முக்கிய பங்கு வகிப்பதுடன், புதிய இந்தியா வடிவமைப்பதற்கான பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு மாணவரும் தங்கள் பங்களிப்பை உணர வேண்டும். மாணவர்கள் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
உலக நாடுகளில் இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. அடுத்து 30 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்க வேண்டும். மத்திய அரசு நிறைய கட்டமைப்புகளை சீரமைத்துள்ளது. அதில் ஒன்றுதான் ஜி.எஸ்.டி. இதன் மூலம் ஒரே வருடத்தில் வரி கட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
இந்தியாவின் அனைத்து துறைகளிலும், அனைத்து தரப்பினரும் வளர்வதே ஒட்டு மொத்த வளர்ச்சி. அதை நாம் அடைய வேண்டும். அதில் ஐ.ஐ.டி. மாணவர்களின் பங்கு முக்கியமானது. அந்த வளர்ச்சி நமது சுற்றுச்சூழலையும், வளங்களையும் கவனித்துக்கொள்ளும் வகையில் இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகக்குழு தலைவர் பவன் கோயங்கா உள்பட பலர் பேசினர். தொடக்கத்தில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி வரவேற்று அறிக்கை படித்தார்.
Related Tags :
Next Story