8 வழிச்சாலை திட்டம் கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பூட்டு போடப்பட்டு இருக்கிறதா? மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்


8 வழிச்சாலை திட்டம் கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பூட்டு போடப்பட்டு இருக்கிறதா? மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்
x
தினத்தந்தி 9 July 2018 11:00 PM (Updated: 9 July 2018 8:37 PM)
t-max-icont-min-icon

8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதா? என்பதற்கு மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

சென்னை, 

8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதா? என்பதற்கு மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் 8 வழிச்சாலை பிரச்சினை தொடர்பாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

8 வழிச்சாலை

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தைப் பற்றி மக்களும், அரசியல் கட்சிகளும் கருத்துகளே சொல்லக்கூடாது என்று வாய்ப்பூட்டு போடக்கூடிய வகையிலே இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த காவல்துறை தொடர்ந்து அந்தப் பணியை செய்து வந்து கொண்டிருக்கிறது. அதுபற்றி, விளக்கிட வேண்டும் என்ற அடிப்படையிலே ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவருடைய தொகுதிக்கே சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு, அவர் தடுக்கப்பட்டிருக்கிறார்.

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, அங்கு இருக்கக்கூடிய மக்களை சந்திக்கச் சென்ற நேரத்தில் அவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜனநாயக முறையில் போராடினால் இந்த அரசுக்கு என்ன தயக்கம்?

சர்வாதிகாரத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்று மனப்பால் குடித்த அரசுகள், மண்ணில் வீழ்ந்திருக்கக்கூடிய வரலாற்றை தான் பெற்றிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தினுடைய தனி சிறப்பே சுதந்திரமான பேச்சுரிமையும், எழுத்துரிமையும் தான் என்பதை இந்த அரசு உணர வேண்டும். கைது செய்வதாலும், அடக்குமுறையாலும் எதையும் சாதித்து விட முடியாது. எனவே இந்தப் போக்கை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

முடக்க முயற்சி

இந்த அரசை பொறுத்தவரைக்கும், இன்றைக்கு போராடுவதற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதிக போராட்டங்கள் நடைபெற்று வரும் மாநிலம் தமிழ்நாடு தான். யாரையும் தடை செய்வதில்லை.

சிலபேர் வேண்டுமென்றே இந்த திட்டத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்ற காரணத்தினால் தான் இப்படிப்பட்ட பிரச்சினை உருவாகிறது.

வாய்ப்பூட்டு

எதிர்க்கட்சித்தலைவர் வாய்ப்பூட்டு என்று சொன்னார்கள். உண்மையிலேயே, இந்த அரசில் தான் இவ்வளவு சுதந்திரமாக பேசிக்கொண்டு இருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த அரசைப் பற்றி விமர்சனம் செய்கின்றார்கள். அதை எல்லாம் அரசு பொறுத்துக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த காலத்திலே, எத்தனை வழக்குகள் போட்டார்கள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

வாய்ப்பூட்டு என்று சொல்வது, பேச்சிற்கு வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய கருத்து சுதந்திரம், இந்த அரசிலே அனுமதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை சொல்லிக்கொள்கிறேன். டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவருடைய நாடாளுமன்ற தொகுதிக்கு கூட செல்ல முடியவில்லை என்று சொன்னார். அது தவறான கருத்து. அவர் பல இடங்களிலே சென்று, விவசாயிகளையும், பொதுமக்களையும் சந்தித்து கருத்து கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையின் அடிப்படையிலே, சேலத்திலே சென்று கருத்துக்களை கேட்டிருக்கின்றார்.

தவறான கருத்து

சிலபேர் இந்த திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டுவரக்கூடாது என்று முழுமூச்சுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய சிறந்த திட்டம். இது ஏதோ சேலத்திற்கு தான் இந்த சாலை அமைக்கப்படுவதைப் போல ஒரு தவறான கருத்தை பரப்பிக்கொண்டு வருகிறார்கள். அது முற்றிலும் தவறு. மேற்கு மாவட்டம், அதாவது சேலத்திற்கு பிறகு நாமக்கல் இருக்கின்றது, கரூர் இருக்கின்றது, திண்டுக்கல் இருக்கின்றது, மதுரை இருக்கின்றது. அதேபோல இந்த பக்கம் பார்த்தீர்கள் என்றால், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், கேரளா வரை அந்த வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, அந்த மேற்கு மாவட்டம் மற்றும் அண்டை மாநிலத்திலே இருக்கின்ற கனரக வாகனங்கள் எல்லாம் அந்த வழியாக செல்கின்றபோது, பாதுகாப்பு கருதி தான், இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது.

ஒத்துழைப்பு

ஆண்டொன்றுக்கு 14 லட்சம் வாகனங்கள் இன்றைக்கு அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஒரு 5 ஆண்டு பார்க்கும்போது 70 லட்சம் வாகனங்கள் உயர்கின்றது. ஆக 2 கோடியே 57 லட்சம் வாகனங்கள் தற்போது இருக்கின்றது. இந்த 70 லட்சம் வாகனங்கள் வருகின்றபொழுது, கிட்டத்தட்ட 3 கோடியே 27 லட்சம் வாகனங்கள் தமிழ்நாட்டிலே இருக்கும். ஆகவே, இந்த வாகனங்கள் எல்லாம் செல்வதற்கு தகுந்த தொழில்நுட்பத்துடன் கூடிய சாலை வசதி தேவை. அதற்காகத்தான் இந்த சாலை வசதியை நாம் ஏற்றுக்கொண்டோம். மத்திய அரசாங்கம் நிதியுதவி செய்கின்றது. அதன் அடிப்படையிலே, நாம் சாலை அமைக்கின்றோம். அந்த நிலம் கொடுப்பவர்களுக்கு போதிய அளவிற்கு, தேவையான அளவிற்கு நில இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வாகனங்களுடைய எண்ணிக்கை அதிகரிக்கின்ற காரணத்தினாலே, அதற்கு தேவையான சாலையை அரசு அமைத்து கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் விபத்தை தடுக்க முடியும். ஆகவே, இன்றைக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டம். இந்த திட்டத்தை வேண்டுமென்றே சிலபேர் எதிர்க்கிறார்கள். இது தவறு என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, இந்த சாலை அமைப்பதற்கு உண்டான பணியை செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story