தமிழக சட்டசபையில் லோக் அயுக்தா சட்ட மசோதா 9-ந் தேதி நிறைவேறுகிறது


தமிழக சட்டசபையில் லோக் அயுக்தா சட்ட மசோதா 9-ந் தேதி நிறைவேறுகிறது
x
தினத்தந்தி 3 July 2018 5:45 AM IST (Updated: 3 July 2018 5:07 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் லோக் அயுக்தா சட்ட மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு 9-ந் தேதி நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, 

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா என்ற விசாரணை அமைப்பை உருவாக்குவது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. தமிழகத்தில் லோக் அயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து ஜூலை 10-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கெடு விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

லோக் அயுக்தா, லோக்பால் தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் சட்டத் திருத்தங்களுக்குப் பின்னர், லோக் அயுக்தாவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு வைத்த வாதத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

எனவே லோக் அயுக்தாவை தமிழகத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தற்போது தமிழக சட்டசபை நடைபெற்று வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார் என்று அரசு வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த மசோதா தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த மசோதாவை நாளை (4-ந் தேதி) தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், பின்னர் சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான 9-ந் தேதியன்று அதை விவாதத்தின் மூலம் அரசு நிறைவேற்றவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story