டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச்சென்றார். #NITIAayog #EdappadiPalaniswami
சென்னை,
டெல்லியில் நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
நிதி ஆயோக் அமைப்பின் 4-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்துகொள்கிறார்கள்.
அதன்படி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது. 2 அமர்வுகளாக இந்த கூட்டம் நடைபெற இருப்பதாகவும், கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்திக்க இருப்பதாகவும் தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்து பேசும்போது, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பார் என்றும், தமிழகம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவையும் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
நிதி ஆயோக் கூட்டம் முடிந்ததும், பொதிகை தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பும் எடப்பாடி பழனிசாமி, நாளை இரவே தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார்.
Related Tags :
Next Story