ஜெயலலிதா சிகிச்சை குறித்த ஆவணங்களை சரிபார்க்க மருத்துவர்கள் குழு அமைக்க ஆணையத்துக்கு தமிழக அரசு அனுமதி


ஜெயலலிதா சிகிச்சை குறித்த ஆவணங்களை சரிபார்க்க மருத்துவர்கள் குழு அமைக்க ஆணையத்துக்கு தமிழக அரசு அனுமதி
x
தினத்தந்தி 30 April 2018 10:00 PM (Updated: 30 April 2018 8:44 PM)
t-max-icont-min-icon

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை சரிபார்க்க மருத்துவர்கள் குழுவை ஏற்படுத்திக்கொள்ள ஆணையத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை, 

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் சிகிச்சையை மேற்பார்வையிட தமிழக அரசு சார்பில் 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் இடம்பெற்ற மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் சிலரும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளனர். அதேபோன்று ஜெயலலிதாவுக்கு எந்தெந்த மருத்துவர்கள் என்னென்ன சிகிச்சை அளித்தனர் என்று அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக மருத்துவ அதிகாரி சத்யபாமா சாட்சியம் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே மற்றும் ஐதரபாத், பெங்களூர் நகரங்களைச் சேர்ந்த பிரபல மருத்துவர்கள் அளித்த சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. அதேபோன்று அப்பல்லோ நிர்வாகம் 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட மருத்துவ அறிக்கையை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த ஆவணங்களையும், ஏற்கனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ள மருத்துவர்களின் சாட்சியங்களையும் சரிபார்த்து ஜெயலலிதாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா?, அவரது உடல்நிலை பாதிப்புக்கு தகுந்தவாறு மருந்து, மாத்திரைகள் அளிக்கப்பட்டனவா?, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சாட்சியம் அளித்துள்ள மருத்துவர்களின் சாட்சியங்கள் சரியாக உள்ளதா? என்பதை கண்டறிய ஆணையத்துக்கென்று தனியாக மருத்துவர் குழுவை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

இதை பரிசீலித்த தமிழக அரசு, மருத்துவர்கள் குழுவை ஏற்படுத்திக்கொள்ள ஆணையத்துக்கு நேற்று அனுமதி அளித்துள்ளது. இந்த மருத்துவ குழுவில் 4 மருத்துவர்கள் இடம்பெறுவார்கள் என்றும், அவர்கள் யார் என்பதையும் நீதிபதி ஆறுமுகசாமி முடிவு செய்வார் என்றும் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ குழுவில் இடம்பெறும் மருத்துவர்கள் அரசு மருத்துவர்களாவோ அல்லது தனியார் மருத்துவர்களாகவோ இருக்கலாம் என்றும், சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த குழு ஆணையத்தின் விசாரணை முடிவடையும் வரை செயல்படும் என்றும், ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆணையத்தின் நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு இந்த குழு ஆவணங்களை சரிபார்த்து பதில் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Next Story