தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் கராத்தே தியாகராஜன் அறிவிப்பு


தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் கராத்தே தியாகராஜன் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 April 2018 3:45 AM IST (Updated: 1 April 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கராத்தே தியாகராஜன் அறிவித்து உள்ளார்.

சென்னை, 

தலித் மக்கள் பாதுகாப்பு சட்டத்தை வலுப்படுத்தக்கோரி தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கராத்தே தியாகராஜன் அறிவித்து உள்ளார்.

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மீதான அடக்குமுறைகள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெறுகிறது. நாடு சுதந்திரம் அடைந்தபிறகு 1955-ம் ஆண்டு தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறை தடுப்புச் சட்டம் அப்போதைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டு அரசியல் சட்டத்தில் ஒரு அம்சமாக சேர்க்கப்பட்டது.

1989-ம் ஆண்டு மத்திய அரசு தலித் மக்கள், பழங்குடியின மக்கள் அடக்குமுறை பாதுகாப்புச் சட்டத்தை கடுமையாக்கி அமல்படுத்தியது. ஆனாலும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. 30 நிமிடங்களுக்கு ஒரு தலித் பெண் வன்கொடுமை தாக்குதலுக்கு ஆளாவதாக சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்தநிலையில் தலித் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமை பாதுகாப்பு சட்டம் நீர்த்து போகின்ற அளவுக்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இது தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

குறிப்பிட்ட அந்த வழக்கில் மத்திய அரசும் சட்டத்துறையும் அரசு வக்கீல்களும் தலித் மக்களுக்கு ஆதரவாக முறையான வாதம் நடத்தாததே இதற்கு காரணம். தலித் மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை சட்டத்தை வேண்டும் என்றே வலுவற்று போக வேண்டும் என்று திட்டமிட்டு துணை போயிருக்கிறது நரேந்திர மோடி அரசு.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தி ஆகியோர் நாடெங்கும் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக இருந்தார்கள். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல சலுகைகளை கொண்டு வந்து சட்டமாக்கியிருக்கிறார்கள். அவர்களது வழியில் செயல்படும் ராகுல்காந்தி தலித் மக்களுக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்திய அவர் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஜனாதிபதியை சந்தித்து இதுகுறித்து முறையிட்டிருக்கிறார்.

பா.ஜ.க. அரசின் மெத்தனத்தாலும், உள்நோக்கம் கூடிய பாரபட்சத்தாலும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை மறு சீராய்வு செய்ய மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை மேலும் வலுப்பெற செய்ய வேண்டும். அந்த சட்டத்தை அரசியல் சாசனத்தின் திருத்த முடியாத சட்டங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ராகுல்காந்தி வழிகாட்டுதலின் படி தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் ஆணைக்கிணங்க 2-ந்தேதி (நாளை) காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே எனது தலைமையிலும், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜசேகர் மற்றும் மத்திய சென்னை எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட, பகுதி, வட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story