தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு சசிகலாவுடன் சந்திப்பு


தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு சசிகலாவுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 31 March 2018 9:10 AM IST (Updated: 31 March 2018 9:10 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு சசிகலாவை இன்று சந்தித்து அவரது கணவர் நடராஜன் மறைவுக்கு ஆறுதல் கூறினார். #KNNehru

தஞ்சாவூர்,

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனுக்கு கடந்த 17ந்தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத்திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக அவரை, உறவினர்கள் குளோபல் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 

செயற்கை சுவாசத்துடன் அவருக்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நடராஜன் கடந்த 19ந்தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் உயிரிழந்தார்.  அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

கணவர் மறைவுக்காக பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா கடந்த 20ந்தேதி 15 நாட்கள் பரோலில் வெளிவந்து தஞ்சாவூருக்கு புறப்பட்டார்.  அங்கு நடராஜனின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  தொடர்ந்து பரோல் முடியும் வரை தஞ்சாவூரிலேயே அவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் வீட்டிற்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு இன்று சென்றார்.  அங்கு சசிகலாவை சந்தித்து அவரது கணவர் நடராஜன் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

பெங்களூரு சிறையில் இருந்து கணவர் மறைவுக்காக பரோலில் வெளிவந்த சசிகலா இன்று மீண்டும் சிறைக்கு புறப்பட உள்ளார்.  இந்த நிலையில், அவரை நேரு சந்தித்து பேசியுள்ளார்.  இந்த சந்திப்பில் சசிகலாவுடன் திவாகரனும் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

Next Story