நகர ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நிலத்தரகர்கள் கைது


நகர ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நிலத்தரகர்கள் கைது
x
தினத்தந்தி 28 March 2018 3:30 AM IST (Updated: 28 March 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை அங்கீகாரத்துக்கு லஞ்சம் பெறப்படுவதை கண்டித்து, சென்னையில் நகர ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நிலத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, 

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பதிவு செய்ய தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதை எதிர்த்து, நிலத்தரகர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சில வரன்முறைகளை ஏற்படுத்தி அனுமதி வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, மனைகளுக்கான அங்கீகாரம் வழங்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த தனி அலுவலர்கள் வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் வழங்க அதிக லஞ்சம் வாங்குவதாகவும், அங்கீகாரம் வழங்குவதற்காக நடைபெறும் முறைகேடுகள் அதிகரித்து உள்ளதாகவும் நிலத்தரகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில், இதனை கண்டித்து இந்திய தேசிய ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ், நில தரகர்கள் நல சங்க தலைவர் வி.என்.கண்ணன் தலைமையில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கூட்டமைப்பு செயலாளர் எஸ்.எம்.இப்ராகிம், பொருளாளர் எஸ்.கிள்ளிவளவன் உள்பட ஏராளமான நிலத்தரகர்கள் சென்னை அண்ணாசாலையில் உள்ள நகர ஊரமைப்பு இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, வி.என்.கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தடுக்க வேண்டும்

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் வழங்க கீழ்நிலை அதிகாரிகள் வாகன வசதியுடன் லஞ்சம் கொடுத்தால் தான் இடத்தை பார்வையிட வருகிறார்கள். அதற்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெற சென்றால் இடத்தின் மதிப்பை கணக்கிட்டு, லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்கிறார்கள். அப்படி கொடுக்காவிட்டால், அங்கீகாரம் வழங்க மறுக்கிறார்கள்.

ஏற்கனவே, ரியல் எஸ்டேட் தொழில் முடங்கி கிடக்கும் நிலையில், இவர்களுக்கு வீட்டை விற்று லஞ்சமாக கொடுக்க வேண்டியது உள்ளது. இதை அரசு உடனடியாக தடுக்க வேண்டும். விண்ணப்பித்த குறிப்பிட்ட நாட்களில் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற காலக்கெடுவை அரசு நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமூகநலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story