எந்த படிப்பையும் தாய் மொழியில் படித்தால்தான் நன்றாக புரியும் வெங்கையா நாயுடு பேச்சு
பொறியியல் உள்ளிட்ட எந்த படிப்பையும் தாய் மொழியில் படித்தால் தான் நன்றாக புரியும் என்று துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறினார்.
சென்னை,
இந்துஸ்தான் குழும பொன் விழாவின் நிறைவு விழா நேற்று மாலை சென்னை கிண்டியில் நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார். புதிதாக கட்டப்பட்ட ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-
பிரிட்டிஷ் கல்வி முறையால் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் திறமை வாய்ந்தவர்கள் உருவாகாத சூழ்நிலை ஏற்பட்டது. அந்த காலத்தில் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இருந்தன. அதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து நிறைய பேர் கல்வி கற்க வந்தனர்.
தாய்மொழியில் தான் அனைவரும் பேசுகிறார்கள். உலக நாடுகளில் பலரும் தாய் மொழிக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இந்தியாவில் பெற்றோர் குழந்தைகளை ஆங்கிலத்தில் பேசவைக்கிறார்கள். அந்த நிலை மாறவேண்டும். தாய் மொழியில் படியுங்கள். அவ்வாறு படித்தால் தான் நன்றாக புரியும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எந்த படிப்பையும் தாய் மொழியில் படிக்க வேண்டும்.
தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் 46.9 சதவீதம். இது இந்தியாவில் முதல் இடம். கல்வியால் தான் நாட்டின் பொருளாதாரம் முன்னேறும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.
விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் டி.ஜெயகுமார், இங்கிலாந்து துணை தூதர் பரத் ஜோஷி, பாதிரியார் ஜோசப் மார் தோமா, இந்துஸ்தான் குழும இயக்குனர் அசோக் வர்கீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்துஸ்தான் குழும தலைவர் எலிசபெத் வர்கீஷ் வரவேற்றார். இறுதியாக குழும இயக்குனர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story