வன அதிகாரியின் உடல், அரசு மரியாதையுடன் தகனம்


வன அதிகாரியின் உடல், அரசு மரியாதையுடன் தகனம்
x
தினத்தந்தி 5 March 2018 4:30 AM IST (Updated: 5 March 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் யானை தாக்கி உயிர் இழந்த வன அதிகாரியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கம்பம்,

தேனி மாவட்டம் கம்பம் கொண்டித்தொழுவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவர், கடந்த 2001-ம் ஆண்டு வனத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள நாகரஒலே புலிகள் காப்பகத்தில் கள இயக்குனர் மற்றும் வன பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் இவர், வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கபினி அணை அருகே காட்டு தீயை அணைக்க வனத்துறையினருடன் சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டுயானை தாக்கியதில் மணிகண்டன் உயிரிழந்தார். இதையொட்டி அவருடைய உடல், மைசூரு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து அவருடைய உடல், சொந்த ஊரான கம்பத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் நேற்று காலையில் கொண்டுவரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு, தேனி மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மணிகண்டனின் மனைவி சங்கீதாவிற்கும், அவரது குழந்தைகளுக்கும் அவர் ஆறுதல் கூறினார்.

பெங்களூரு கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாப்பு அதிகாரி சுபாஷ் மால்கரே, மதுரை மண்டல வன பாதுகாவலர் ராஜேஸ்ஜெகனியா ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் தேனி எம்.பி. பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் மற்றும் தமிழகம், கர்நாடகா, ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வனத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு மணிகண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனிக்குமார் தலைமையில், கம்பம் தொட்டன்துறை சுருளிப்பட்டி அருகேயுள்ள சுடுகாட்டுக்கு மலரால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தி மூலம் மணிகண்டனின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். அங்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மணிகண்டன் உடல் தகனம் செய்யப்பட்டது.

Next Story