கார்த்தி சிதம்பரம் கைதை கண்டித்து சென்னையில் இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
![கார்த்தி சிதம்பரம் கைதை கண்டித்து சென்னையில் இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் கார்த்தி சிதம்பரம் கைதை கண்டித்து சென்னையில் இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்](https://img.dailythanthi.com/Articles/2018/Mar/201803010305499173_Congress-Party-today-is-a-demonstration-in-Chennai_SECVPF.gif)
கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கராத்தே தியாகராஜன் கூறினார்.
சென்னை,
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார்.
இதனால் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். அவருக்கு முன்ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனிடையே வெளிநாடுகளுக்கு செல்ல தடை இல்லை என்ற உத்தரவை சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் பெற்றார்.
கைது
அதன்படி கடந்த மாதம் லண்டனுக்கு சென்ற கார்த்தி சிதம்பரம் நேற்று காலை சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்து டெல்லிக்கு அழைத்து சென்றனர்.
இதுபற்றி அறிந்த காங்கிரஸ் கட்சியினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டின் முன்பு குவிந்தனர். இதையடுத்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
இதுகுறித்து தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கராத்தே தியாகராஜன் கூறியதாவது:–
மோடி அரசின் தவறுகளை தொடர்ந்து ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி வருகிறார். அவரை பழிவாங்கும் விதமாக கார்த்தி சிதம்பரத்தை பா.ஜனதா அரசு கைது செய்துள்ளது. ஏற்கனவே 2 முறை நேரில் விளக்கம் அளித்தும் சி.பி.ஐ. கைது நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த செயலை ராகுல் காந்தியின் ஒப்புதலோடு செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் கண்டித்து உள்ளனர். நாட்டில் உள்ள மற்ற தலைவர்களும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசரும் கண்டித்தனர். கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story