தீவிர அரசியலில் இனி ஈடுபடுவேன் டி.ராஜேந்தர் பேட்டி

தமிழகத்தில் தீவிர அரசியலில் இனி ஈடுபடுவேன் என்று டி.ராஜேந்தர் கூறினார்.
ஆலந்தூர்,
சென்னை விமான நிலையத்தில் லட்சிய தி.மு.க. கட்சியின் தலைவர் டி.ராஜேந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-
லட்சிய தி.மு.க. 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க போகிறது. இதையொட்டி இன்று (புதன்கிழமை) முக்கிய முடிவுகள் எடுக்க இருக்கிறேன். அரசியல் பயணம் பற்றி அறிவிக்கப்படும். அரசியலில் யாருடன் சேர வேண்டும், யாருடன் சேரக்கூடாது என தெளிவுபடுத்த உள்ளேன். தீவிர அரசியலில் நான் ஈடுபடப்போவதை இனி நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் சினிமாவில் சாதித்து உள்ளனர். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வரும்போதே முதல்-அமைச்சர் ஆகிவிடுவீர்களா? என ஊடகங்கள் தான் கேட்கின்றன. தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய அவர்கள் தாராளமாக அரசியலுக்கு வரட்டும்.
அமைச்சருக்கு நிகரான சிறுசேமிப்பு தலைவராக இருந்து உள்ளேன். 3 முதல்-அமைச்சர்களை எதிர்த்து அரசியல் செய்து விட்டேன். ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக என்னுடைய பதவியை ராஜினாமா செய்தேன். ஆனால் மற்றவர்கள் கவுன்சிலர் பதவியை கூட ராஜினாமா செய்யமாட்டார்கள்.
அ.தி.மு.க. அமைச்சர்கள் தனித்தன்மையுடன் செயல்பட முடியுமா?. இரட்டை இலை சின்னம் இருந்தும், மத்திய அரசுடன் நெருக்கமாக இருந்தும் ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது ஏன்?. அளவுக்கு அதிகமான நம்பிக்கை மனிதனை கவிழ்த்து விடும்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை, அந்த பாடலை பாடும் போது எழுந்திருக்கவில்லை என்று சொல்கிறார்கள். இது பற்றி 15 நாட்கள் பேசிவிட்டு பின்னர் மறந்து விடுவார்கள். தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. இதனால் தான் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அடுத்தவர்கள் தலையில் மொட்டையும் அடிக்கலாம், மிளகாயையும் அரைக்கலாம் என்ற நிலை உள்ளது.
மத்திய அரசை எதிர்த்து போராடியவர் ஜெயலலிதா. அவரின் முகத்தை எப்படி மறக்கலாம். சிலையில் எங்கே அவருடைய முகஜாடை. அரசியலுக்கு சிம்பு வருவது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் நான் போட்டியிட போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story