குறுகிய காலத்தில் செய்யப்பட்டதால் சிறு தவறு நேர்ந்திருக்கலாம் ஜெயலலிதா சிலையை செய்த சிற்பி பேட்டி
தனது சொந்த செலவிலேயே ஜெயலலிதா சிலையை சீரமைத்து தர தயாராக இருப்பதாக சிற்பி பி.எஸ்.வி.பிரசாத் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை அவரைப் போல் இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
ஜெயலலிதா சிலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கருத்துக்கு முடிவுகட்ட ஜெயலலிதாவின் சிலையில் திருத்தங்கள் செய்ய அ.தி.மு.க. தலைமை தீர்மானித்துள்ளது.
சொந்த செலவில்...
இந்தநிலையில் சிலையை செய்த ஆந்திரா மாநில சிற்பி பி.எஸ்.வி.பிரசாத் தற்போது ஜெயலலிதாவின் சிலையை சீரமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டதாகும். 20 நாட்களுக்கு முன்பு தான் எனக்கு இதற்கான ஆர்டர் தரப்பட்டது. களிமண்ணால் மாதிரி சிலை செய்யப்பட்டது. அதற்கு 3 நாட்கள் ஆனது. களிமண் சிலை மாதிரியில் எந்த மாறுபாடும் தெரியவில்லை. இதையடுத்து வெண்கலத்தில் சிலை உருவாக்கப்பட்டது. இரவும் பகலுமாக பாடுபட்டு இந்த சிலை செய்யப்பட்டது.
குறுகிய காலம் என்பதால் சிலை வேகமாக தயாரிக்கப்பட்டது. சிலை தோற்றம் குறித்து சர்ச்சை எழுந்திருப்பது எனக்கு வேதனை தருகிறது. சமூக வலைதளங்களில் இது தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. எனவே ஜெயலலிதா சிலையை சீரமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளேன். எனது சொந்த செலவில் அந்த சீரமைப்பு பணியை செய்ய முடிவு செய்துள்ளேன்.
தொடர்பு கொள்ளவில்லை
சிலை செய்து முடித்தபோது அதை பல்வேறு கோணங்களில் படமாக எடுத்து அ.தி.மு.க. தலைவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர்கள் அதை பார்த்துவிட்டு ஒப்புதல் அளித்தனர். அதன் பிறகே சிலையை சென்னைக்கு கொண்டு வந்தேன். ஜெயலலிதா சிலையை உருவாக்க நானும், எனது சகோதரன் காமதேனு பிரசாத்தும் மற்றும் 20 ஊழியர்களும் அரும்பாடு பட்டோம். குறுகிய காலத்தில் செய்யப்பட்ட சிலை என்பதால் சிறு தவறு நேர்ந்திருக்கலாம். நாங்கள் செய்த தவறை நாங்களே சரி செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம்.
ஆனால் இதுவரை அ.தி.மு.க. தரப்பில் இருந்து யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விரைவில் முடிவு
ஜெயலலிதாவின் வெண்கல சிலை மொத்தம் சுமார் 350 கிலோ எடை கொண்டது. ஜெயலலிதாவின் தற்போதைய சிலை சீரமைப்பு செய்யப்படுமா? அல்லது இந்த சிலைக்கு பதில் வேறு ஒரு புதிய சிலை செய்யப்படுமா? என்பது குறித்து அ.தி.மு.க. தலைமை விரைவில் முடிவு செய்ய உள்ளது.
Related Tags :
Next Story