கடத்தப்பட்டதாக பெற்றோர் புகார்: நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து டாக்டர், 17 வயது சிறுமி மீட்பு


கடத்தப்பட்டதாக பெற்றோர் புகார்: நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து டாக்டர், 17 வயது சிறுமி மீட்பு
x
தினத்தந்தி 8 Feb 2018 3:45 AM IST (Updated: 7 Feb 2018 8:48 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர், 17 வயது சிறுமி கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

தேனி

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெரியகுளத்தை சேர்ந்த டாக்டர், 17 வயது சிறுமி கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை சுப்பிரமணியசாவடி தெருவை சேர்ந்தவர் காந்தி (வயது 61). இவர், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களது மகன் மனோஜ் (வயது 32). இவர், மதுரை மாவட்டம் வெள்ளளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

மனோஜின் அக்காள் வனிதா. இவர், தனது கணவர் குமார் மற்றும் 17 வயது மகளுடன் மதுரையில் வசித்து வருகிறார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திடீரென மனோஜும், 17 வயது பெண்ணும் மாயமாகி விட்டனர். அவருடைய பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே அவர்கள் 2 பேரும், திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கி இருப்பதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து காந்தி, ஈஸ்வரி ஆகியோர் அங்கு சென்றனர். தங்களது மகன் மற்றும் பேத்தியை ஆசிரமத்தை விட்டு வெளியேற்றுமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு அவர்கள் 2 பேரும், கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பதாக ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் காந்தி புகார் மனு கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்று மனோஜையும், அந்த 17 வயது சிறுமியையும் மீட்டு பெரியகுளத்துக்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் காவி உடை அணிந்து சன்னியாசி போல காட்சி அளித்தனர். அவர்கள் 2 பேரிடமும், ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும், விருப்பப்பட்டே ஆசிரமத்துக்கு சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் தேனி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

Next Story