உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு தனி அதிகாரியாக அருண் ராய் ஐ.ஏ.எஸ். நியமனம்


உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு தனி அதிகாரியாக அருண் ராய் ஐ.ஏ.எஸ். நியமனம்
x
தினத்தந்தி 7 Feb 2018 4:00 AM IST (Updated: 7 Feb 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டு நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான தனி அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் சார்பில் முதன்முறையாக 2015-ம் ஆண்டு செப்டம்பரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் விமர்சையாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலீட்டாளர்களுடன் மேற்கொள்ளப்பட்டன.

இவற்றில் 96 ஆயிரத்து 341 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய 62 ஆயிரத்து 738 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 61 திட்டங்கள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

முதலீட்டாளர்கள் விரைவில் அனுமதியைப் பெற்று மீதமுள்ள திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக, தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த 2 நாள் மாநாட்டின் கடைசி நாளில் நிறைவுரை ஆற்றிய அப்போதைய முதல்-அமைச்சர் ஜெய லலிதா, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தும் என்று உறுதி அளித்தார்.

சட்டசபையில் கடந்த மாதம் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அப்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், இந்த ஆண்டு கண்டிப்பாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலக் கமிஷனர் வி.அருண் ராயை, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2018-ன் தனி அதிகாரியாக நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த மாநாடு நடக்கும் இடம், தேதி பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். மேலும், ஒவ்வொரு நாட்டுக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த தகவலை அனுப்புவதோடு அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணி, ஒருங்கிணைக்கும் பணி ஆகியவற்றை தனி அதிகாரி அருண் ராய் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

Next Story