வைரமுத்துவுக்கு எதிரான மிரட்டல்கள் நிறுத்தப்பட வேண்டும் தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டறிக்கை
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான தாக்குதல்களும், மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்ப்படைப்பாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை,
தமிழ்ப் படைப்பாளிகள் சா.கந்தசாமி, பிரபஞ்சன், மாலன், முத்துலிங்கம், தமிழச்சி தங்கபாண்டியன், மனுஷ்யபுத்திரன், மார்க்ஸ் எஸ்.ராமகிருஷ்ணன், சல்மா, ச.தமிழ்செல்வன், அறிவுமதி, பவா செல்லத்துரை, சு.வெங்கடேசன், டிராஸ்கி மருது, இளையபாரதி, இமையம், ஹாஜா கனி, இந்திரன், காவ்யா சண்முக சுந்தரம், ஏகலைவன், அ.வெண்ணிலா, அருணன், இளம்பிறை, ஜெய பாஸ்கரன், தேவநேயன், வேலுசாமி இந்திரன், சு.ராமசந்திரன், இரா.தெ.முத்து, ச.செந்தில்நாதன், கிராபியன் பிளாக், தமிழன் பிரசன்னா, அ.முத்துகிருஷ்ணன், ஒளிவண்ணன், நா.அசோகன், ஆர்.கே. அருள் செல்வன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியதுடன் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அளப்பரிய பங்களிப்பை செய்திருப்பவர் கவிஞர் வைரமுத்து. தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய முக்கியமான ஆளுமைகள் குறித்து அவர் தொடர்ந்து எழுதி வரும் செயல்பாட்டின் தொடர்ச்சியாகவே ஆண்டாள் குறித்து தினமணி நாளிதழில் எழுதி ராஜபாளையத்திலும் பேசியிருக்கிறார்.
தமிழை ஆண்டாள் என்ற கட்டுரையில் சொல்லப்படாத ஒரு சொல்லை அவர் சொல்லியதாக சொல்லி மக்களை திசை திருப்பும் காரியங்களை சில பேர் திட்டமிட்டு செய்கிறார்கள். இனக்கலவரத்தை தூண்ட பார்க்கிறார்கள். ஒன்றுப்பட்ட தமிழ்ப் படைப்பாளர்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஏற்றுக்கொள்ள முடியாது
இலக்கிய பரிச்சயம் இல்லாதவர்கள் தமிழை ஆண்டாள் கட்டுரையை படிக்காமலேயே அவதூறு பரப்புகிறார்கள். அந்த ஆய்வுக்கட்டுரையில் கவிஞர் வைரமுத்து ஆண்டாளின் பெருமையை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறார். அதில் ஒரு ஆராய்ச்சியாளரின் மேற்கோளையும் சுட்டிக்காட்டுகிறார். கடவுள் மறுப்பாளர்களும் கற்க வேண்டிய தமிழ், ஆண்டாளின் தமிழ் என்பதை இந்த கட்டுரையில் கவிஞர் வைரமுத்து புலப்படுத்தியிருக்கிறார். அந்த ஆய்வு கட்டுரையின் மேற்கோளை சுட்டிக்காட்டியதில் எந்த தவறும் இல்லை. அவர் செய்யாத ஒன்றுக்கு வருத்தம் தெரிவித்ததே எங்களில் பலருக்கு வருத்தம். ஆனாலும் அவரது பண்பாடு அது என்று புரிந்து கொள்கிறோம்.
மேற்கோள் காட்டிய வாக்கியத்தில் அதில் இல்லாத ஒரு சொல்லை சொல்லியதாக திரித்து அவதூறு பரப்பியது தான் பிரச்சினைக்கு காரணம். எந்தவொரு கருத்தையும் கருத்தியல் ரீதியாக சந்திக்காமல், தனிப்பட்ட முறையில் கொச்சையாக தாக்குவதையும், மிரட்டுவதையும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பாதுகாப்பு
தன்னுடைய கட்டுரையில் எடுத்துக்காட்டிய மேற்கோள் பிறரை புண்படுத்தியிருக்கும் பட்சத்தில் வருத்தம் தெரிவித்து கொள்வதாக கவிஞர் வைரமுத்து சொல்லியிருக்கிறார். அந்த கட்டுரையை வெளியிட்ட தினமணி நாளிதழும் வருத்தம் தெரிவித்துள்ளது. இதற்கு பிறகும் கவிஞர் வைரமுத்துவை ஊடகங்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலமாக மிக மோசமான முறையில் தாக்குவதையும் போராட்டங்கள் மூலம் மன்னிப்பு கேட்டு கெடு விதிப்பதையும் எழுத்துலகில் இயங்கும் படைப்பாளிகள் இணைந்து கண்டிக்கிறோம்.
ஆண்டாள் தமிழச்சி 3 ஆயிரம் ஆண்டுகளாக பேசவும், எழுதவும்படும் இழையறாத தமிழ்மொழியில் 1,200 ஆண்டுகளுக்கு முன்பே திருவெம்பாவை திருப்பாவை பாடியவர். அவர் தமிழினம் முழுவதற்கும் சொந்தமானவர். அவரை ஓர் இனத்திற்குள்ளோ சமயத்திற்குள்ளோ, சாதிக்குள்ளோ அடைக்க முடியாது. அவர் தமிழில் பாடிய சர்வதேச கவிஞர். அவர் எங்களுக்கே சொந்தம் என்று கொண்டாடி வன்முறை செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. அது ஜனநாயகத்திற்கு இடப்படும் சவால். நாகரிகமான சுதந்திர நாட்டில் கவிஞர்களை-எழுத்தாளர்களை பயமுறுத்தி சிலர் பணிய வைக்க முயல்வதை ஜனநாயகத்தின் பெயராலும், சுதந்திரத்தின் பெயராலும் அனுமதிக்க முடியாது. கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் பாதுகாப்பிற்கு அரசு முன்னின்று செயல்பட வேண்டும்.
முற்றுப்புள்ளி
படைப்புலகில் நீண்ட காலமாக இயங்கி வரும் கவிஞர் வைரமுத்து எழுதியதை சரிவரப் புரிந்து கொள்ளாமலேயே இத்தகைய உணர்வு வயப்பட்ட எதிர்ப்புகளை தூண்டி விடும் விதத்தில் சிலர் பேசுவதும், எழுதுவதும் எந்த விதத்திலும் ஆரோக்கியமானதல்ல. இத்தகைய மிரட்டல்களையும், தாக்குதல்களையும் இனியாவது நிறுத்தி தமிழ் சமூகத்தில் பொது அமைதிக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.
கவிஞர் வைரமுத்து மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், அவர் பாதுகாப்பும் மிக முக்கியமானது என்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தமிழால் ஒருங்கிணைந்திருக்கும் நமக்கிடையே எந்த தீய சக்திகளும் சிறு விரிசலை ஏற்படுத்த நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதை உணர்த்த வேண்டிய தருணம் இது. தமிழ் சமூகம் இதை கண்டிப்பாக உணரும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story