சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மரணம்


சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மரணம்
x
தினத்தந்தி 30 Oct 2017 11:41 PM (Updated: 30 Oct 2017 11:41 PM)
t-max-icont-min-icon

சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை 7 மணியளவில் அவர் காலமானார்.

மேலாண்மை பொன்னுசாமியின் உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக சென்னை மணலி அருகேயுள்ள சின்னச்சேக்காடு வேதகிரி தெருவில் இருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. மரணமடைந்த மேலாண்மை பொன்னுசாமிக்கு பொன்னுத்தாய் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு கிராமத்தில் 1951–ம் ஆண்டு பொன்னுசாமி பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக 5–ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத இவர், புத்தகங்கள் வாசிப்பதை விருப்பமாக கொண்டிருந்தார். குறிப்பாக, இலக்கிய புத்தகங்களை விரும்பிப் படித்த இவர், சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். இதுவரை, 22 சிறுகதை தொகுப்புகள், 6 நாவல்கள், 6 குறுநாவல்கள் ஆகியவற்றை அவர் எழுதியுள்ளார்.

கடந்த 2007–ம் ஆண்டு மேலாண்மை பொன்னுசாமி எழுதிய ‘மின்சாரப் பூ’ என்ற சிறுகதை தொகுப்பு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. இதேபோல், 2002–ம் ஆண்டு ‘மானாவாரி பூ’ என்ற சிறுகதை தொகுப்புக்கு சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசை அவர் பெற்றார். மேலும், பல பரிசுகளையும், விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:– தமிழ் சிறுகதை மற்றும் புதின எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைந்த செய்தி கேட்டு துயரமுற்றேன். தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்த அவரது மறைவுக்கு தலைவர் கருணாநிதி சார்பிலும், தி.மு.க. சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:– சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு இழப்பு. அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்கள், இலக்கிய நண்பர்களுக்கும் ம.தி.மு.க. சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:– தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான மேலாண்மை பொன்னுசாமி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

முற்போக்கு இலக்கிய உலகிற்கு அவர் அளித்துள்ள பங்களிப்பு என்றென்றும் அவரை நினைவு கூரச் செய்யும் என்பது உறுதி. கடைசி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெருமைமிக்க படைப்பாளியாக திகழ்ந்த அவரது மறைவுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story