தமிழகத்துக்கு 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்து


தமிழகத்துக்கு 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்து
x
தினத்தந்தி 27 Sept 2017 4:45 AM IST (Updated: 27 Sept 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

ஆயிரத்து 500 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொள்முதலுக்கு ஒப்புதல்

தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஆயிரத்து 500 மெகாவாட் திறனுள்ள சூரிய மின்சக்தி நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுடன் திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.

அந்த ஒப்பந்தப்புள்ளியின் மூலமாக 16 தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஆயிரத்து 500 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு 3 ரூபாய் 47 பைசா என்ற விலை அடிப்படையில் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.

16 நிறுவனங்கள்

அதன்படி, நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திடம் இருந்து 709 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படும். தலா 100 மெகாவாட் சூரிய மின்சக்தி, பெங்களூரு ராசி கிரீன் எர்த் எனர்ஜி, டெல்லி சாலிட்டர் பி.டி.என் சோலார், கொல்கத்தா நர்பேராம் விஸ்ராம், ராஜஸ்தான் ஜெய்ப்பூர் ரேஸ் பவர் இன்பிரா, கொல்கத்தா என்.வீ.ஆர் எனர்ஜி, குர்கான் ரென்யூ சோலார் எனர்ஜி (ராஜஸ்தான்) ஆகிய நிறுவனங்களில் இருந்து வாங்கப்படும்.

54 மெகாவாட் சூரிய மின்சக்தி, ஐதராபாத் சாய் ஜோதி இன்பிரா வென்ஷெர்ஸ், தலா 50 மெகாவாட் குர்கான் டலேத்துத்தாயி சோலார் பிராஜக்ட், மும்பை ஷப்பூர்ஜி பல்லோன்ஜி இன்பிராஸ்ரக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களில் இருந்து வாங்கப்படும்.

தலா 10 மெகாவாட் சென்னை ஜி.ஆர்.தங்கமாளிகை, சென்னை ஜி.ஆர்.தங்கமாளிகை அண்டு சன்ஸ், சென்னை ஜி.ஆர்.டி சில்வர் வேர்ஸ், 5 மெகாவாட் பெங்களூர் டைனமைஸ் சோலார், தலா ஒரு மெகாவாட் சூரிய மின்சக்தி அருப்புக்கோட்டை உதய சூரியன், கோவை தேவ் இண்டர்நேஷனல் ஆகியோரிடம் இருந்து பெறப்படும். அந்த வகையில் மொத்தம் ஆயிரத்து 500 மெகாவாட் சூரிய மின்சக்தி வாங்கப்படும்.

ரூ.9 ஆயிரம் கோடி

இந்த நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டில், ஒரு மெகாவாட்டிற்கு ரூ.6 கோடி வீதம், மொத்தம் ஆயிரத்து 500 மெகாவாட்டிற்கு ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் ஆயிரத்து 747 திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

மேலும், இந்த ஆண்டிற்குள் 700 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அவற்றுடன், தற்போது நிறுவப்பட உள்ள ஆயிரத்து 500 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கான சூரிய சக்தியின் நிறுவுத்திறன் 2021-க்குள் கூடுதல் இலக்கான 5 ஆயிரம் மொகாவாட் என்ற இலக்கை அடைந்திட வழிவகை ஏற்படும்.

கையெழுத்தானது

சூரிய சக்தி மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துடன் என்.எல்.சி. இந்தியா லிமிடெட், ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், நர்பேராம் விஸ்ராம் மற்றும் என்வீஆர் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் கையெழுத்திட்டன.

மீதமுள்ள 12 சூரிய மின் உற்பத்தி நிறுவனங்கள் சூரிய சக்தி மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் கையெழுத்திடவுள்ளனர்.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (பொறுப்பு) ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம்.சாய்குமார், என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பி.செல்வகுமார், தலைமை பொது மேலாளர் (நிதி) அ.கணேசன் மற்றும் சூரிய சக்தி நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story