அனிதாவின் மரணத்தை நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் அரசுக்கு, டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்


அனிதாவின் மரணத்தை நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் அரசுக்கு, டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 Sept 2017 3:15 AM IST (Updated: 6 Sept 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

அனிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், எனவே அந்த சம்பவத்தை நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் எம்.எல்.ஏ.வும் புதிய தமிழகம் கட்சித் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு, அவர் அளித்த பேட்டி வருமாறு:-

அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்திலே சந்தித்து புதிய தமிழகம் கட்சி சார்பாக மனு அளித்திருக்கிறேன். அனிதா 12-ம் வகுப்பு தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றாலும், நீட் தேர்விலே 87 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கல்விக்கான தகுதியை அவர் பெறவில்லை.

எனவே, அவர் நன்கு தெரிந்து அந்த தேர்வை எழுதியிருக்கிறார். மருத்துவப்படிப்பு கிடைக்கவில்லை என்றால், வேளாண்மை படிப்புக்கு போவதாகவும் தெரிவித்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு வரை தைரியமாக சென்ற மாணவி மரணம் அடைந்திருக்கிறார் என்பதையும், அதுவும் தற்கொலை செய்திருக்கிறார் என்பதையும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இதில் ஏதோ மிகப்பெரிய மர்மம் அடங்கியுள்ளது.

மிக இளவயதுள்ள அந்த பள்ளி மாணவியை கஜேந்திரபாபு, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆகியோர் டெல்லி வரை அழைத்து சென்றார்கள். தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைத்துள்ளனர். ஆனால் இவை எதுவும் அப்போது ஊடகங்களில் செய்தியாக வரவில்லை.

ஏழை அனிதாவை நீட் தேர்வுக்கு எதிராக பயன்படுத்தும் நோக்கத்தில் அவருக்கு கொடுத்த தேவையற்ற அழுத்தங்கள் அவரை அந்த சூழ்நிலைக்குத் தள்ளியதா அல்லது வேறுவிதமாக அவருடைய மரணம் நிகழ்த்தப்பட்டதா என்பதை முறையாக அமர்வு நீதிபதியால் விசாரிக்கப்பட்டால்தான், இது உண்மையிலே தற்கொலையா அல்லது பலர் கொடுத்த அழுத்தத்தால் நடந்த நிகழ்வா அல்லது கொலையா என்பது வெளிச்சத்திற்கு வரும்.

அனிதாவை டெல்லிக்கு அழைத்துச்சென்ற கஜேந்திரபாபு, சிவசங்கர் உள்பட யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்களிடம் முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அனிதா மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையிலே முதல்-அமைச்சரிடம் நான் மனு அளித்திருக்கிறேன்.

இதுபோல ஏற்கனவே பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணுபிரியா மரணம் முதலில் தற்கொலை என்று சொல்லப்பட்டது, ஆனால் அவர் நிர்ப்பந்தத்தின் காரணமாக தற்கொலை செய்தார் என வழக்கு தொடரப்பட்டது.

தர்மபுரி இளைஞர் இளவரசன், திவ்யா காதல் விவகாரத்தில் முதலில் இளவரசன் தற்கொலை என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார் என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல பலசம்பவங்கள் உள்ளன. கொலைகளையும் தற்கொலையாக மாற்றிய சம்பவங்களும் நடந்துள்ளன.

எனவே இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது. முத்துக்குமரனை ஈழப்பிரச்சினைக்காக பலியாக்கினார்கள். சசிபெருமாளை மது பிரச்சினைக்காக பலியாக்கினார்கள். இப்போது நீட் தேர்வுக்கு எதிராக பிரசாரம் செய்வதற்காகவும், மத்திய, மாநில அரசுகளை எதிர்ப்பதற்கும், அரசியல் காரணங்களுக்காகவும் இந்த அனிதாவை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற சந்தேகம் தமிழகம் முழுவதும் உள்ளது.

இந்த மாணவி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தான் ரூ.1.50 லட்சம் பணம் கட்டி படித்துள்ளார். அனிதாவின் மரணத்தில் நீதி கிடைக்கவேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் முறையாக ஆய்வு செய்யவேண்டும் என்று மனு அளித்துள்ளேன். இன்னும் ஓரிரு நாளில் மத்திய உள்துறை மந்திரியை சந்திக்கவிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பின்னர் பதிலளிப்பதாகக் கூறிவிட்டு டாக்டர் கிருஷ்ணசாமி சென்றுவிட்டார்.

Next Story