திருவொற்றியூர் கடல் பகுதியில் மிதந்த எண்ணெய் படலம் முழுமையாக அகற்றம் இழப்பீடு வழங்க மீனவர்கள் கோரிக்கை


திருவொற்றியூர் கடல் பகுதியில் மிதந்த எண்ணெய் படலம் முழுமையாக அகற்றம் இழப்பீடு வழங்க மீனவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 July 2017 3:45 AM IST (Updated: 30 July 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

கப்பல்கள் மோதிய விபத்தால் திருவொற்றியூர் கடல் பகுதியில் மிதந்த எண்ணெய் படலம் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளது.

சென்னை, 

கப்பல்கள் மோதிய விபத்தால் திருவொற்றியூர் கடல் பகுதியில் மிதந்த எண்ணெய் படலம் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த ஜனவரி மாதம் மும்பையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல், ஈராக் கப்பலுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கப்பலின் எண்ணெய் குழாய் மற்றும் வால்வுகளில் சேதம் ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கடலில் பரவியது.

இந்த எண்ணெய், கடலில் படலமாக மிதந்து எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு என 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீலாங்கரை வரையுள்ள கடற்கரை பகுதிகளில் படலமாக ஒதுங்கியது. இதனால் கடலில் இருந்த பல்வகை மீன்கள், கடல் ஆமைகள் செத்து மிதந்தன. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும், கடற்கரையில் உள்ள பாறைகளில் படிந்து காணப்பட்டது.

இதையடுத்து, எண்ணெய் படலங்களை துறைமுக அதிகாரிகளும், கடலோர காவல் படையினரும், மீனவர்களும், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தற்போது கடலில் மிதந்த எண்ணெய் படலம் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது.

இதுகுறித்து திருவொற்றி யூரைச் சேர்ந்த மீனவர்கள் சார்பில் மீனவர் தனபால் கூறியதாவது:-

கடலில் இரு கப்பல்கள் மோதிய விபத்தில் எண்ணெய் படலம் கடலில் மிதந்தது. இதனால் மீன் பிடிக்க முடியாத நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டனர். வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து எண்ணெய் படலத்தை நீக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் தற்போது கடற்கரையிலும், நடுக்கடலிலும் எண்ணெய் படலம் காணப்படவில்லை.

இந்த சம்பவத்தால் மீனவர்கள் 2 மாதங்களாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்ததுடன், அவர்களுக்கு சராசரியாக ரூ.25 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டது. இதனை ஈடு கட்ட அரசு வழங்குவதாக அறிவித்த நிவாரண நிதி இதுவரை வழங்கவில்லை. இதனை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story