கீழடி அகழாய்வுக்காக பாராளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்


கீழடி அகழாய்வுக்காக பாராளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்
x
தினத்தந்தி 27 Jun 2017 4:15 AM IST (Updated: 26 Jun 2017 9:27 PM IST)
t-max-icont-min-icon

கீழடி அகழாய்வுக்காக பாராளுமன்றத்தில் தொடர்ந்து போராடுவோம் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

சென்னை,

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழர் உரிமை மாநாட்டில் எம்.பி.க்கள் கனிமொழி மற்றும் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மாநாட்டில் கனிமொழி பேசியதாவது:–

தமிழர்கள் எப்படி பிரிந்து இருந்தாலும், மொழி என்று வரும்போது ஒன்றாக எழுந்து நிற்பார்கள் என்பதற்கான வாய்ப்பை பா.ஜனதா தந்திருக்கிறது.

கீழடி ஆய்வில், அது ஒரு வணிக தலமாக இருக்கலாம் என்றும், நமக்கும் இலங்கை மற்றும் பிற வெளிநாடுகளுடனும் தொடர்பு இருந்திருக்கிறது என்பதை மிக தெளிவாக சொல்வதற்கான கண்டுபிடிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி ஆய்வு மூலம் சரித்திரத்தை மாற்றிப்போடும் கண்டுபிடிப்புகள் தமிழகத்தில் வெளிவர உள்ளது.

ஒரே இந்தியா, ஒரே வரி கொண்டுவரும் பா.ஜனதாவிடம் கேட்கிறேன், நாங்கள் வாழ்ந்த ஒரே இந்தியா என்ற எங்களின் கலாசார பண்பாட்டை ஏன் அழிக்கப்பார்க்கிறீர்கள். அரசாங்கம் பெருமையோடு செய்ய வேண்டிய காரியத்துக்கு மந்திரிகளின் முன் சென்று மக்கள் ஏன் போராட வேண்டும். இந்திய நாடு ஒன்று என்ற எங்களின் பண்பாடுகளை நிலைநாட்ட நாங்கள் ஏன் போராட வேண்டும்? இதற்கு வடக்கு வாழ வேண்டும், தெற்கு தேய வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம்.

பாஸ்போர்ட்டில் இந்தியை ஏன் திணிக்கிறீர்கள்? யாருக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறுங்களேன். எந்த இடத்தில் எல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் மொழி, பண்பாடு, கலாசாரத்தை இந்த ஆட்சி திணிக்கிறது. அதனால் தான் நமது கலாசாரம், பண்பாடு தெரிந்துவிடக்கூடாது என கீழடி அகழாய்வை தடுக்கிறது.

நிச்சயமாக நாங்கள் பாராளுமன்றத்தில் இருக்கும் வரை தொடர்ந்து இதற்காக போராடி குரல் எழுப்பிக்கொண்டு இருப்போம்.  இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில், இந்திய அரசை இந்தி அரசாக மாற்ற முயலும் செயலுக்கு எதிராகவும், மொழி சமத்துவத்தை நிலைநாட்டவும் தமிழ் சமூகம் வீறுகொண்டு எழ வேண்டும். கீழடி அகழாய்வு பணியில் தமிழக தொல்லியல் துறையும் ஈடுபட வேண்டும். இவ்விரு பிரச்சினைகளையும் அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழக அரசியல் கட்சிகள் கூட்டாகவும், தனித்தனியாகவும் தங்கள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்பது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story