அப்துல் ரகுமான் மரணம்: கவிஞர் வைரமுத்து இரங்கல்


அப்துல் ரகுமான் மரணம்: கவிஞர் வைரமுத்து இரங்கல்
x
தினத்தந்தி 3 Jun 2017 1:00 AM IST (Updated: 2 Jun 2017 11:42 PM IST)
t-max-icont-min-icon

கவிஞர் அப்துல் ரகுமான் மறைவைத் தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கவிஞர் அப்துல் ரகுமான் மறைவைத் தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

ஒரு கவிதை ஆலமரம் சாய்ந்துவிட்டது. மரபுக்கவிதைக்கும், புதுக்கவிதைக்கும் கட்டப்பட்ட ஒரு தங்கப்பாலம் தகர்ந்துவிட்டது. இஸ்லாமிய சமுதாயம் தமிழுக்கு வழங்கிய பெருங்கொடைகளுள் ஒன்று தொலைந்துவிட்டது. கவிக்கோ அப்துல் ரகுமான் 60 ஆண்டுகளாய்த் தமிழோடு இயங்கியவர், தமிழாக விளங்கியவர். நாங்கள் எல்லாம் கருணாநிதியின் கவியரங்கக் குடும்பத்து உறுப்பினர்கள். அப்துல் ரகுமான் இல்லாத கவியரங்கம் சொல் இல்லாத மொழி போன்றதாகும். எல்லாக் கவியரங்குகளிலும் வெற்றிக்கொடி பறக்கவிட்ட வித்தகக் கவிஞர் அவர்.

4 நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் என்னை அழைத்தார். ‘தைரியமாக இருங்கள்’ என்றேன். ‘மரணத்தை புரிந்துகொண்டேன், எனக்கு பயமில்லை’ என்றார். ‘உங்களை பார்க்க வேண்டும்’ என்றேன். ‘என் வீட்டுக்குப் போனதும் சொல்லியனுப்புகிறேன்’ என்றார். அவர் வீட்டுக்குப் போனதும் சொல்லியனுப்பிய செய்தி இதுவாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவில்லை நான்.

இலக்கியம் ஒரு கவிதையை இழந்துவிட்டது. மார்க்கம் ஓர் அறிஞனை இழந்துவிட்டது. நான் என் மூத்த சகோதரரை இழந்துவிட்டேன். எங்கள் வாழ்வின் மிச்சம் அவர் கவிதைகளோடு பயணப்படும். மொழியோடு அவரது புகழ் வழிநெடுக வாழும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், இலக்கிய உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story