கோல்டு வின்னர் எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நாடு முழுவதும் 54 இடங்களில் நடந்தது
வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக கோல்டு வின்னர் எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை,
வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக கோல்டு வின்னர் எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். நாடு முழுவதும் 54 இடங்களில் இந்த சோதனை நடந்தது.
எண்ணெய் நிறுவனம்
கோல்டு வின்னர் சமையல் எண்ணெய், தீபம் விளக்கு ஏற்றும் எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை காளஸ்வரி ரீ-பைனரி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சென்னையை தலைமை இடமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்குகிறது.
தமிழகத்தில் தூத்துக்குடி, மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, விழுப்புரம், வேலூர், சிதம்பரம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடகா, கேரளா, ஒடிசா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களிலும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்குகள், உற்பத்தி நிலையங்கள், அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்தியா மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, குவைத், ஆஸ்திரேலியா, இலங்கை, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
அதிரடி சோதனை
இந்நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரி அதிகாரிகள் 200 பேர் கொண்ட குழுவினர் நாடு முழுவதும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை ராஜசேகரன் தெருவில் உள்ள இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சென்னை வருமான புலனாய்வு பிரிவு கூடுதல் கமிஷனர் ஜெயராகவன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சோதனை நடத்த வந்தனர்.
பாதுகாப்பு பணி
அப்போது அங்கு இருந்த காவலாளி, அவர்களை உள்ளே செல்ல முதலில் அனுமதிக்க மறுத்து விட்டார். பின்னர் வந்திருப்பது வருமான வரித்துறை அதிகாரிகள் என்று தெரிந்தவுடன் அவர்களை அனுமதித்தார்.
வருமான வரித்துறை அதிகாரிகளோடு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்களும் அலுவலகத்துக்குள் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அந்த அலுவலகத்தில் சோதனை தொடங்கியது. அதிகாலை தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
சென்னையில் 32 இடங்கள்
சோதனையின் போது, காளஸ்வரி ரீ-பைனரி நிறுவனத்தின் உள்நாடு, அயல்நாடு விற்பனை விவரம், உற்பத்தி விவரம், வரவு-செலவு விவரம் போன்ற ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். தலைமை அலுவலகம் அருகே உள்ள இந்நிறுவனத்தின் உரிமையாளர் முனுசாமி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான வண்ணாரப்பேட்டையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அப்பகுதியில் இந்நிறுவனத்தின் நகைக்கடை உள்பட சென்னையில் மட்டும் 32 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தூத்துக்குடியில் உள்ள காளஸ்வரி எண்ணெய் மில் உள்பட மதுரை, கோவை, திருச்சி உள்பட இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள இந்நிறுவனத்தின் ஏஜெண்டு ரமேசுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தில் மொத்தம் 46 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ஆவணங்கள் சிக்கின
சோதனை குறித்து வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
காளஸ்வரி ரீ-பைனரி நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வந்ததையடுத்து நாடு முழுவதும் 54 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன.
இன்னும் சோதனை முடிவடையவில்லை. மேலும் 2 நாட்கள் சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளோம். இறுதிகட்ட சோதனைக்கு பிறகே எத்தனை கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது என தெரியவரும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story