கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை ‘கிடுகிடு’ உயர்வு
தமிழக அரசின் வாட் வரி விதிப்பால் லாரி வாடகை கட்டணம் உயர்வு, காய்கறி வரத்து குறைவால், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசு கடந்த 4-ந்தேதி பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை உயர்த்தியதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.78 ரூபாயும், டீசல் விலை 1.70 ரூபாயும் அதிகரித்தது. இதையடுத்து சரக்கு லாரி வாடகை கட்டணம் உயர்ந்தது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய்-கனி, மலர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் சுகுமார் கூறியதாவது:-
விலை நிலவரம்
லாரி வாடகை ஒருபுறம் இருக்க, வறட்சியால் காய்கறிகள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி ரூ.20-க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கும், ரூ.10-க்கு விற்பனையான பல்லாரி வெங்காயம் ரூ.15-க்கும், ரூ.40-க்கு விற்பனையான சாம்பார் வெங்காயம் ரூ.50-க்கும், ரூ.10-க்கு விற்பனையான உருளைக்கிழங்கு ரூ.12-க்கும், ரூ.60-க்கு விற்பனையான பீன்ஸ் ரூ.70-க்கும், ரூ.10-க்கு விற்பனையான முட்டைக்கோஸ், முள்ளங்கி ஆகியவை ரூ.15-க்கும், ரூ.15-க்கு விற்பனையான அவரைக்காய், தேங்காய் ஆகியவை ரூ.20-க்கும், ரூ.20-க்கு விற்பனையான கேரட், சவ்சவ், கத்திரிக்காய் ரூ.30-க்கும், ரூ.30-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.50-க்கும், ரூ.30-க்கு விற்பனையான புடலங்காய், சேனைக்கிழங்கு ரூ.35-க்கும், ரூ.18-க்கு விற்பனையான பூசணிக்காய் ரூ.22-க்கும், ரூ.20-க்கு விற்பனையான பாகற்காய் ரூ.40-க்கும், ரூ.18-க்கு விற்பனையான பரங்கிக்காய் ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.
மேலும் அதிகரிக்கும்
வறட்சி காரணமாக வரும் நாட்களிலும் காய்கறிகள் விளைச்சல் குறையும். இதனால் காய்கறிகள் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட்டில் விலை உயர்ந்ததையடுத்து வெளி மார்க்கெட்டுகள், சில்லரை கடைகள், தள்ளுவண்டி காய்கறி கடைகளிலும் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
Next Story