மு.க.ஸ்டாலினை வீணாக சீண்ட வேண்டாம் டி.டி.வி.தினகரனுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. எச்சரிக்கை


மு.க.ஸ்டாலினை வீணாக சீண்ட வேண்டாம் டி.டி.வி.தினகரனுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 March 2017 3:15 AM IST (Updated: 9 March 2017 11:55 PM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலினை வீணாக சீண்ட வேண்டாம் என்று டி.டி.வி.தினகரனுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

மன்னார்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புலம்பல் 

‘‘அன்னியச் செலாவணி மோசடி பேர்வழிக்கு அறிக்கை விடுவதெல்லாம் ஒரு கேடா?’’ என்றுதான் அ.தி.மு.க.வில் ‘கூவத்தூர்’ மிரட்டல் மூலம் துணைப் பொதுச்செயலாளர் பதவியை அபகரித்துக்கொண்டிருக்கும் டி.டி.வி. தினகரனின் அறிக்கையை பார்த்ததும் எண்ண தோன்றுகிறது. ‘தங்கத்தைப் பார்த்து இழித்ததாம் பித்தளை’ என்பது போல் டி.டி.வி.தினகரன், அப்பழுக்கற்ற, அரசியல் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழும் மு.க.ஸ்டாலினை பார்த்து விமர்சிப்பது விரக்தியின் விளிம்பில் நிற்பவரின் புலம்பல் போல் இருக்கிறது.

இப்போதுள்ள அரசு ‘குற்றவாளி வழி காட்டும் அரசுதான்’ என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அறிக்கை என்ற பெயரில் வாந்தி எடுத்திருக்கும் டி.டி.வி.தினகரனைப் பார்த்து உள்ளபடியே பரிதாபப்படுகிறேன்.

ரகசிய உடன்பாடு 

இன்றைய நிலையில் அ.தி.மு.க.விற்குள் யாரும் டி.டி.வி.தினகரனை மதிப்பதில்லை. தொண்டர்களோ ‘பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டியைப் பார்ப்பது’ போல் டி.டி.வி.தினகரனைப் பார்த்து மிரண்டு ஓடுகிறார்கள். முதல்–அமைச்சராகி இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் போன்றோர் உங்களிடம் தற்காலிகமாக ‘அடகு’ வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தலைமையை நிரந்தரமாக மீட்பது எப்படி என்ற ‘ரகசிய உடன்பாட்டிற்கு’ ஏற்கனவே வந்துவிட்டார்கள்.

விரைவில் தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் செய்யாத துணைப் பொதுச் செயலாளர் பதவியும் பறிபோகப் போகிறது. போயஸ் தோட்டத்தில் இருந்தும் வெளியேற வேண்டிய நிலையும் வரப்போகிறது என்ற ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் மு.க.ஸ்டாலினை பற்றி விமர்சித்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள டி.டி.வி.தினகரன் முயலுகிறார். அது பகல் கனவு. பலிக்காது.

வீணாக சீண்ட வேண்டாம் 

இன்றைக்கு தளபதி போகிற இடமெல்லாம் ‘இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங்களே’ என்று முறையிடாத தாய்மார்கள் இல்லை. மாணவர்கள் இல்லை. இளைஞர்கள் இல்லை. ஆனாலும் அண்ணா கற்றுக் கொடுத்த ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’, தலைவர் கருணாநிதியிடம் பயின்ற அரசியல் பண்பாடு போன்றவற்றை மனதில் வைத்து மு.க.ஸ்டாலின் அமைதியாக இருக்கிறார். ஆகவே, மு.க.ஸ்டாலினை வீணாக சீண்ட வேண்டாம் என்று டி.டி.வி.தினகரனை எச்சரிக்க விரும்புகிறேன்.

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பினாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மு.க.ஸ்டாலின் தீர்மானித்துவிட்டால் ஒரு நிமிடம் கூட அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் தொடர முடியாது என்பதை மட்டும் நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி.தினகரனை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story