மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் கண்களை குளமாக்குகிறது:மு.க.ஸ்டாலின் அறிக்கை
மத்திய அரசு இனிமேலும் ஒரு நிமிடம் கூட வேடிக்கை பார்க்கக்கூடாது மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய கொடூர துப்பாக்கி சூடு சம்பவம் கண்களை குளமாக்குகிறது என்றும், மத்திய அரசு இனிமேலும் ஒரு நிமிடம் கூட வேடிக்கை பார்க்கக்கூடாது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கண்களை குளமாக்குகிறது
இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, கையெறி குண்டுகளை வீசியதில் ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த 21 வயதே ஆன பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மீனவர் சரோன் உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அவர்கள் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் வெளியான தகவல் கேட்டு மிகவும் வேதனையடைந்துள்ளேன். தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு தி.மு.க. சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய- மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியமாகவே இருந்து வருகின்றன. இரு நாட்டு அரசுகள் முன்னிலையில், இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை இலங்கை அரசு தீர்மானமாக உதாசீனப்படுத்தி வருகிறது. மீனவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தக் கூடாது என்று 5.11.2016 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டுள்ள இலங்கை அரசு தனது ராணுவத்தின் மூலம் தமிழக மீனவரை இப்போது சுட்டுக் கொன்றிருப்பது மனித உரிமை மீறிய செயல் மட்டுமல்ல- வாழ்வாதாரம் தேடிச் செல்லும் மீனவர்களின் உயிரைப் பறிக்கும் மனித நேயமற்ற கொடூரச் செயலாகும். இதற்குப் பிறகும் இந்தியாவுக்கு இலங்கை நட்பு நாடு என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த வித அர்த்தமும் இல்லையோ என்று கருதும் அளவிற்கு இந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டை இலங்கை ராணுவம் நடத்தியிருக்கிறது. குண்டுமாரி பொழிந்தார்கள் என்று சம்பவத்தை பார்த்த மீனவர்கள் அளித்த பேட்டி கண்களை குளமாக்குகிறது.
ஒரு நிமிடம் கூட...
இலங்கை கடற்படையினரின் இந்த கொடூரத்தாக்குதல் ராமநாதபுரம் பகுதி மீனவ கிராமங்களில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழக மீனவர்கள் மத்தியிலும் கடும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. மீன் பிடிக்க கடலுக்குள் சென்றால் திரும்பி உயிருடன் வர முடியாதோ என்ற பீதியை மீனவ மக்கள் மத்தியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் என்று அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இலங்கை ராணுவம் இப்போது மீனவர்களை சுட்டுக் கொல்வது என்று முடிவு எடுத்து செயல்படுவதை மத்திய அரசு இனிமேலும் ஒரு நிமிடம் கூட வேடிக்கை பார்க்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆகவே உடனடியாக இலங்கை அரசை தூதரக ரீதியாக தொடர்பு கொண்டோ அல்லது இந்தியாவிற்கான இலங்கை தூதரை நேரில் அழைத்தோ இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. இலங்கை ராணுவத்தின் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் கடும் விளைவுகளை இலங்கை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அரசுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை விடுக்க வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிதியளித்து, படுகாயமடைந்த மீனவர்களுக்கும் உயர்தர சிகிச்சை அளித்து காப்பாற்ற அ.தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறைப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலைக்கானக் கூட்டியக்கத்தினர் என்னை நேரில் சந்தித்து, 7 பேரின் விடுதலைக்கான முயற்சிக்கு தி.மு.க.வின் ஆதரவைக் கோரினர். இந்தியாவின் இளந்தலைவராக விளங்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொடூர படுகொலையை தி.மு.க. ஒருபோதும் ஆதரித்து நியாயப்படுத்தியதில்லை.
இந்த படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
விடுதலைக்கு அனுமதி வழங்கவேண்டும்
7 பேரை விடுவிப்பதற்கானத் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருப்பது கவலையளிக்கிறது. ஆகவே தமிழக சட்டமன்ற தீர்மானம், அமைச்சரவைத் தீர்மானம் போன்றவற்றை மதித்து 7 பேரின் விடுதலைக்கு மத்திய அரசு தனது அனுமதியை உடனடியாக வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கால் நூற்றாண்டுகளுக்கு மேல் இந்த 7 பேரும் சிறையில் இருப்பதாலும், பேரறிவாளன் போன்றவர்கள் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாலும் இந்த 7 பேரின் மறுவாழ்வுக்காக சட்டம் வழங்கியுள்ள வாய்ப்பினை உறுதி செய்திட மத்திய அரசுக்கு அ.தி.மு.க. அரசு அழுத்தம் கொடுத்து உடனடியாக அந்த அனுமதியைப் பெற்று விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story