காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சீபுரம்,
காமாட்சியம்மன் கோவில்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
இந்த கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
காமாட்சியம்மன் கோவிலில் கடந்த 1995–ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் 21 ஆண்டுகளுக்கு பிறகு, வியாழக்கிழமை (நேற்று) கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கும்பாபிஷேகம்
இதையொட்டி 4 ராஜ கோபுரங்கள், தங்க விமானம், பக்தர்கள் வரிசையில் நிற்க தனி மண்டபம், பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் சுமார் ரூ.35 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தினமும் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலையில் ராஜ கோபுர கலசங்கள் மற்றும் விமான கோபுரத்தின் கலசங்களின் மீது பல்வேறு நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
புனித நீரை ஊற்றி...
காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் கலசங்களின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் அனைவர் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்த விழாவில் காஷ்மீர் மாநில துணை முதல்–மந்திரி நிர்மல்சிங் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
பிரமுகர்கள் பங்கேற்பு
மேலும் பா.ஜ.க. மூத்த நிர்வாகி எச்.ராஜா, மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, பொதுப்பணித்துறை உயர் அதிகாரி முத்தையா, வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. நஜ்மல் ஹோடா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.சோமசுந்தரம், வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்களோடு சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன், சங்கரா பல்கலைக்கழக எம்.பி.ஏ. துறைத்தலைவர் ரமணகுமார், பட்டு தொழிலதிபர்கள் வி.கே.தாமோதரன், வி.எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் கூரம் துரை மற்றும் நீதிபதிகள் உள்பட ஏராளமான பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், கோவில் நிர்வாக அதிகாரி விஜயன், அர்ச்சகர்கள் நடன சாஸ்திரி, பாலு சாஸ்திரி, ஷியாமா சாஸ்திரி ஆகியோர் செய்திருந்தனர்.
காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் என்.ஸ்ரீநாத் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், வெற்றிச்செல்வன், லட்சுமிபதி, முத்துராமலிங்கம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் காஞ்சீபுரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Next Story