நாளை மறுநாள் கும்பாபிஷேக விழா: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கின


நாளை மறுநாள் கும்பாபிஷேக விழா: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கின
x
தினத்தந்தி 4 Feb 2017 4:15 AM IST (Updated: 4 Feb 2017 12:00 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கின.

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கின.

சமயபுரம் மாரியம்மன் கோவில் 

தமிழகத்தில் சக்தி வாய்ந்த அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் ஆகும். வேண்டுவோருக்கு வேண்டு வரம் அளித்து வருவதாலும், தீராத நோய்களை தீர்த்து வருவதாலும் பக்தர்கள் அதீத நம்பிக்கை கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களிலும் இருந்து வருகிறார்கள். கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின.

அரசு ஒதுக்கிய ரூ.25 கோடியிலும், பக்தர்கள் நன்கொடையாலும் பணிகள் நடந்தன. இதில் புதிதாக விநாயகர் சன்னதி, உற்சவர் சன்னதி, கோவிலில் மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளில் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் வசதிக்காக முடி காணிக்கை மண்டபம், தங்கும் விடுதி உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

யாகசாலை பூஜைகள் தொடங்கின 

கும்பாபிஷேக விழாவையொட்டி பூர்வாங்க பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கின. நேற்று காலை 8 மணி முதல் 11.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, தீர்த்த ஸங்கரஹணம், மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், அக்னிஸங்கரஹணம் உள்ளிட்ட பூஜை நடந்தது. தொடர்ந்து யாகசாலை நிர்மாணம், தீபாராதனை நடந்தது.

யாகசாலை பூஜைகள் நேற்று இரவு 8 மணி அளவில் தொடங்கின. யாகசாலை பூஜைக்காக கோவில் முன்பு மொத்தம் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குண்டங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டும், அலங்கார பந்தலும் அமைக்கப்பட்டுள்ளன. அம்மன் முன்பு இருந்து புனித நீர் அடங்கிய குடங்கள், கலசம் எடுத்து வரப்பட்டு பூஜைகள் தொடங்கின.

200 சிவாச்சாரியார்கள் 

ராஜா சிவாச்சாரியார் தலைமையில் தல சிவாச்சாரியார்கள் கணேசன், குரு, பிச்சை உள்பட 200 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையை மேற்கொண்டுள்ளனர். யாகசாலை பூஜைக்காக காவிரி, கங்கை, யமுனா, நர்மதா, சிந்து, கோதாவரி, சரஸ்வதி ஆகிய 7 நதிகளில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டுள்ளன.

யாகசாலை பூஜை தொடக்க விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பரமேஸ்வரிமுருகன் எம்.எல்.ஏ., கோவில் இணை ஆணையர் தென்னரசு உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 2–ம் கால யாகசாலை பூஜை இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் 9 மணி வரை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி முதல் 12 மணி வரை நான்காம் கால யாகசாலை பூஜையும், மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகம் 

விழாவின் முக்கிய நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 6–ம் கால யாகசாலை பூஜையும், விக்னேஸ்வர பூஜையும் நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 5.30 மணிக்கு பரிவாரம் பூர்ணாஹுதி, காலை 5.45 மணிக்கு பிரதானம் பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெறும். காலை 6 மணிக்கு புனித நீர் குடங்கள் புறப்பாடு நடைபெறும். காலை 7.10 மணிக்கு கோவிலில் தங்க விமானம், கோபுரங்கள், பரிவார விமானங்கள் கும்பாபிஷேகம் நடைபெறும். அதனை தொடர்ந்து காலை 7.20 மணிக்கு மாரியம்மன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். கோவில் கலசங்கள் மீது புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றிய பின் அதனை பக்தர்கள் மீது தெளிப்பார்கள்.

கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா அன்று மாலை 4 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். இரவு 8 மணி அளவில் அம்மன் வீதி உலா வருகிறார். விழாவையொட்டி நேற்று இரவு இசை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து விழா நடைபெறும் நாள் வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் பக்தி பாடல், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஹெலிகாப்டர் மூலம் புனித நீர்... 

கும்பாபிஷேகத்தின் போது தெளிக்கப்படும் புனித நீர் பக்தர்கள் மீது பட்டால் அவர்களது பாவம் நீங்கும், பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள், தங்கள் மீது புனித நீர் படுவதற்காக அலைமோதுவார்கள். இந்த நிலையில் பக்தர்கள் அனைவரது மீதும் புனித நீர் படுவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் மூலம் புனித நீரை தெளிக்க வேண்டும் என கோவில் இணை ஆணையர் தென்னரசுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story