தமிழகத்தில் முதன்முறையாக சென்னை அண்ணாசாலை தபால் நிலையத்தில் பொது சேவை மையம் தொடக்கம்
தமிழகத்திலேயே முதன்முறையாக சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் பொது சேவை மையம் தொடங்கப்பட்டது.
சென்னை,
இந்த மையம் மூலம் செல்போன் ரீசார்ஜ், பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.பொது சேவை மையம்
இந்திய அஞ்சல் துறையின் சார்பில் நாடு முழுவதும் குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் பொதுமக்களின் வசதிக்காக பொது சேவை மையங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் பொது சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது.
இந்த பொது சேவை மையத்தை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராதிகா சக்ரவர்த்தி தொடங்கிவைத்தார். இந்த மையத்தில் ஆதார் கார்டு பதிவு–திருத்தம் செய்தல், சொத்துவரி செலுத்துதல், செல்போன் ரீசார்ஜ், பாஸ்போர்ட்–பான்கார்டு விண்ணப்பித்தல், ரெயில்–பஸ் டிக்கெட் முன்பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல் உள்பட 13 சேவைகளை பெறலாம்.
விரிவுபடுத்தப்படும்இந்த சேவை மையம் குறித்து போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராதிகா சக்ரவர்த்தி கூறியதாவது:–
தமிழ்நாட்டில் முதன்முறையாக பொது சேவை மையத்தை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் இன்னும் 93 தலைமை தபால் நிலையங்களிலும் இந்த சேவை மையங்கள் விரைவில் தொடங்கப்படும். சென்னைக்கு அடுத்தபடியாக வேலூர், திருவண்ணாமலையில் இந்த சேவை மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும். இந்த மையத்தின் மூலம் பெறப்படும் சேவைகளுக்கு எந்த வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.