மணப்பாறையில் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள், இளைஞர்கள் உற்சாகம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
திருச்சி,
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை வழிபாடுகள் நடத்தப்பட்டு வாடிவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்படுகிறது. 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்க முயற்சிக்கிறார்கள். போட்டியை ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டுகளித்து வருகின்றனர். மேலும் கரவொலி எழுப்பி மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டி உரிய அனுமதியுடன் நடத்தப்பட்டதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
Next Story