ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்கவேண்டும் என போராடும் மக்கள் வாடிவாசலை முற்றுகையிட்டனர்

ஜல்லிக்கட்டு போட்டி நிரந்தரமாக நடக்கவேண்டும் என போராடும் மக்கள் வாடிவாசலை முற்றுகையிட்டனர்.
அலங்காநல்லூர்,
ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நீடித்த தடை, தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தால் நேற்று உடைந்தது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
அலங்காநல்லூரில் நடைபெறும் போட்டியை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
இருப்பினும் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை ஆர்ப்பாட்டம் நீடிக்கும் என்றும், மெரினாவில் இருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்து உள்ளனர். தமிழகம் முழுவதும் போராட்டம் நீடிக்கிறது நிரந்தர தீர்வு கோரி.
ஜல்லிக்கட்டு தடையை நீக்க இதுதான் நிரந்தர சட்டம் என்று முதல் - அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறிய பின்னரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே அலங்காநல்லூர் மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தமராக நடத்த வழிசெய்ய வேண்டும் என போராடி வருகிறார்கள்.
இன்று 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் போராட்டம் நடத்தும் மக்கள் வாடிவாசலை முற்றுகையிட்டு உள்ளனர்.
அலங்காநல்லூருக்குள் காளைகளை ஏற்றிவரும் வாகனங்களுக்கும் மக்கள் தடை விதித்து உள்ளனர்.
நிரந்தர தீர்வு இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாடிவாசலை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுற்றிஉள்ள கிராமங்கள் வழியாக அலங்காநல்லூருக்குள் வரும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு, முற்றுகையிடப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த அரசுக்கு ஒத்துழைப்பு தருமாறு மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் கோரிக்கை விடுத்து உள்ளநிலையிலும் மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
Next Story