சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொங்கல் சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது


சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொங்கல் சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 10 Jan 2017 2:20 AM IST (Updated: 10 Jan 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொங்கல் சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. பொங்கல் பண்டிகை சென்னையில் தங்கி உள்ள வெளியூரை சேர்ந்தவர்கள் பண்டிகைகளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்தாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 14–ந்

சென்னை,

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொங்கல் சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.

பொங்கல் பண்டிகை

சென்னையில் தங்கி உள்ள வெளியூரை சேர்ந்தவர்கள் பண்டிகைகளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்தாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 14–ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சிறப்பு ரெயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. ஏற்கனவே இயக்கப்படும் ரெயில்கள், பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்டது. எனவே சிறப்பு பஸ்களில் செல்ல மக்கள் தயாராகி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (புதன்கிழமை) முதல் 13–ந் தேதி வரை சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4 ஆயிரத்து 445 சிறப்பு பஸ்கள் உள்பட 11 ஆயிரத்து 270 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.

முன்பதிவு தொடங்கியது

சிறப்பு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆண்களுக்கென தனித்தனியாக கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விண்ணப்ப படிவங்கள் ரூ.1–க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

சிறப்பு கவுண்ட்டர்கள்

சிறப்பு கவுண்ட்டர்களில் நேற்று காலை முதல் பயணிகள் வந்து ஆர்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒரு பிரிவாகவும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு பிரிவாகவும் முன்பதிவு கவுண்ட்டர்களில் பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.

பொங்கல் சிறப்பு பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையம் மட்டுமின்றி 3 தற்காலிக பஸ் நிலையங்களான அண்ணாநகர் (மேற்கு), அறிஞர் அண்ணா பஸ் நிலையம் (மெப்ஸ்), பூந்தமல்லி பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட்டன.

கண்காணிப்பு கேமராக்கள்

முதல் நாளான நேற்று சிறப்பு டிக்கெட் கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்ய வந்தவர்கள் பெரும்பாலும் ஏ.சி. பஸ்களை தான் தேர்வு செய்தனர். அதிகளவு ஏ.சி. பஸ்களையே தேர்வு செய்ததால், அந்த வலைதள பக்கம் திடீரென முடங்கியது. பின்னர் அந்த குறைபாடு நீக்கப்பட்டது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து சரியாக செயல்படுகிறதா? என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே ஊழியர்கள் ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


Next Story