பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் காமராஜர் பெயர் இருட்டடிப்பு நாடார் கூட்டமைப்பு குற்றச்சாட்டு


பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் காமராஜர் பெயர் இருட்டடிப்பு நாடார் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Jan 2017 2:59 AM IST (Updated: 8 Jan 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் முத்து ரமேஷ் நாடார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா கடந்த 6–ந்தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எ

சென்னை,

தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் முத்து ரமேஷ் நாடார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா கடந்த 6–ந்தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். என கூறியுள்ளார். 1957–ம் ஆண்டு நவம்பர் 1–ந் தேதி பெருந்தலைவர் காமராஜர் முதல்–அமைச்சராக இருந்தபோது, ஏழை எளிய மக்கள் படித்து உயர வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்ட உலகின் முன்னோடி திட்டம் மதிய உணவு திட்டம்.

இதை, 1982–ம் ஆண்டு திருச்செந்தூர் இடைத்தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரே, மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்றும், அவரை பின்பற்றியே நான் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது பச்சை குழந்தைகளுக்கு கூட தெரியும். ஆனால், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா பெருந்தலைவர் காமராஜரின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வகையில் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது ஒட்டு மொத்த தமிழ் சமுதாய மக்களிடம் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே, அவர் தனது தவறை திருத்தி கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், தமிழகம் முழுவதும் நாடார் சங்கங்கள், பெருந்தலைவர் காமராஜர் பக்தர்கள் சார்பாக பல கட்ட தொடர் போராட்டங்கள் நடத்துவோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story