2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம்
2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
காரைக்குடி
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் காரைக்குடியில் இருந்து திருச்சி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அதிகாரி அஜய் பிஸ்னா தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் அருண் பிரசாத் முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர் மோகன் வரவேற்றார். காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துத்துரை மரக்கன்றை நட்டு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறும் போது:- தமிழக அரசு மரங்கள் வளர்ப்பதையும் காடுகளின் பரப்பளவை விரிவாக்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் காரைக்குடியில் இருந்து திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் சுமார் 80 கி.மீ. தூர அளவிற்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பராமரிக்க திட்டமிட்டு செயலாற்றி வருவது பாராட்டக்கூடியது. காரைக்குடி நகராட்சி பகுதிகளிலும் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறோம் என்றார்.