கொள்ளிடம் ஆற்றின் வெள்ளநீர் புகுந்ததில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
கொள்ளிடம் ஆற்றின் வெள்ளநீர் புகுந்ததில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின.
பூவாய் மண்டபம் என்று அழைக்கப்படும் கோடாலிகருப்பூர் 7 கண் மதகு உள்ளது. தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும், சிந்தாமணி காட்டாற்று ஓடையில் இருந்தும் வரும் தண்ணீர் குறிச்சி களிங்கு வழியாக சென்று இறுதியில் அந்த மதகு வழியாக கொள்ளிடம் ஆற்றில் கலப்பது வழக்கம். இந்த 7 கண் மதகில் சிறு சிறு இடைவெளி உள்ளது.
இந்த ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே 4 முறை அதிகப்படியான வெள்ளநீர் திறந்து விடப்பட்டபோது, மதகில் உள்ள இடுக்குகள் வழியாக வடிகால் ஓடையில் தண்ணீர் புகுந்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் வயல்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி மற்றும் நெற்பயிர்கள் நாசமாகின.
தற்போது 5-வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று அதிகாலையில் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரால், 7 கண் மதகில் முதல் மதகின் கதவு திடீரென உடைந்தது. சிறிது நேரத்தில் மதகு முற்றிலும் சேதமடைந்தது.
இதனால் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வடிகால் ஓடையில் தண்ணீர் உட்புகுந்தது. இதைத்தொடர்ந்து கோடாலிகருப்பூர், அன்னங்காரம்பேட்டை, கீழக்குடிகாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெல் வயல்களில் வெள்ள நீர் புகுந்து பாய்ந்து ஓடியது. இதில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.