2-ம் கட்டமாக 200 முகாம்கள் நடத்தப்படும்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக வருகிற 5-ந் தேதி முதல் 200 விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடத்தப்படும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
ஊட்டி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக வருகிற 5-ந் தேதி முதல் 200 விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடத்தப்படும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
200 முகாம்கள்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாமை மாவட்ட அளவில் நடத்துவது குறித்து மேற்பார்வை மற்றும் குழு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இதனால் நீலகிரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பப்பதிவு முகாம்கள் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. மேலும் 2-ம் கட்ட முகாம்கள் வருகிற 5-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை 200 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அடிப்படை வசதிகள்
இந்த பணியில் 200 முகாம் பொறுப்பு அலுவலர்கள், 39 மண்டல அலுவலர்கள், 15 மேற்பார்வை அலுவலர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் 292 பேர், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 200 பேர் ஈடுபட உள்ளனர். மேலும் முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகள் உள்ளதா என சம்மந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். சிறப்பான முறையில் முகாம்களை நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனப்ரியா (பொது), மணிகண்டன் (வளர்ச்சி), ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, பூஷணகுமார், முகம்மது குதுரதுல்லா, தோட்ட கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலாமேரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.