கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் (கூட்டுறவுத் துறை மற்றும் வனத்துறை உட்பட) தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவீதம் வழங்கப்பட்டது. எனவே, 2022-2023-ம் ஆண்டிற்கான அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்தினோம்.

அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, தி.மு.க. அரசும் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 10 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்று 7.11.2023 அன்று தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.

அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம், கடந்த 34 மாதங்களாக நடைமுறைப்படுத்தப்படாமல் இந்த தி.மு.க. அரசு காலதாமதம் செய்து வருவது கூட்டுறவுத் துறை ஊழியர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே, உடனடியாக கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் வழங்கியது போல், 2021-ம் ஆண்டு முதல் 20 சதவீத ஊதிய உயர்வுக்கு குறையாமல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story