மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்


மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 23 Oct 2023 12:45 AM IST (Updated: 23 Oct 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்

சிக்கல்:-

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் ஓன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ், ஒன்றிய ஆணையர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

நிதி ஒதுக்க வேண்டும்

தேன்மொழி (அ.தி.மு.க.):-

பொது மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் வசதி, குளத்திற்கு படித்துறை கட்டுதல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போது தான் பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். இதற்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முக்கியத்துவம் அளித்து பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரெங்கா (தி.மு.க.):-

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு முறையாக கணக்கெடுப்பு நடத்தி தகுதியான நபர்களுக்கு உதவிகள் வழங்க வேண்டும். இருக்கை ஊராட்சி வாணிய குளத்தில் வடிகால் வசதி ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஒன்றிய ஆணையர் ராஜகோபால்:- ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து அடிப்படை வசதிகள் செய்வதற்காக ரூ.10 லட்சம் வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன்:-

தற்போது மழைக்காலம் தொடங்குவதால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் சுகாதாரத்துறை பணியாளர்கள் தினந்தோறும் சென்று அங்கு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவரத்தை ஒன்றிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி, பாலையா, பிரவிணா, ரேவதி, இல்முன்னிசா, வாசுகி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லாரன்ஸ், முத்துக்குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story