104 பயனாளிகளுக்கு ரூ.20¾ லட்சம் நலத்திட்ட உதவிகள்
104 பயனாளிகளுக்கு ரூ.20¾ லட்சம் நலத்திட்ட உதவிகள்
தலைஞாயிறு-கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 104 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மெய்யநாதன் வழங்கினர்.
அமைச்சர்கள் ஆய்வு
திருக்குவளை ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திருக்குவளை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கினை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து திருக்குவளை ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் ரூ.472.4 லட்சம் மதிப்பில் வீடுகள் பழுது நீக்கம், வீடுகள் புனரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பழுது நீக்கம் போன்ற பணிகள் நடைபெறுவதையும், திருக்குவளையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பயின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.61 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டும் பணிகளையும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நலத்திட்ட உதவிகள்
திருக்குவளை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊர வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை கட்டிடத்தினை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து ரூ.20 லட்சத்து 76 ஆயிரத்து 370 மதிப்பீட்டில் 104 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
ஆய்வு கூட்டம்
முன்னதாக கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் அமைச்சர்கள் பெரியசாமி, மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன், கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா, தலைஞாயிறு ஆத்மா குழு தலைவர் குமார், வேளாங்கண்ணி பேராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், ஒன்றியக்குழு தலைவர்கள் தமிழரசி(தலைஞாயிறு), செல்வராணிஞானசேகரன் (கீழையூர்) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.