20 கிலோ கெட்டுப்போன கோழி, ஆட்டு இறைச்சி கைப்பற்றி அழிப்பு


விராலிமலையில் 20 கிலோ கெட்டுப்போன கோழி, ஆட்டு இறைச்சி கைப்பற்றி அழிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கெட்டுப்போன இறைச்சிகள் விற்பனை செய்வதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார துறையினர் இறைச்சி கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விராலிமலை-புதுக்கோட்டை சாலை அருகே உள்ள ஒரு இறைச்சி கடையில் கெட்டுப்போன கோழி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்வதை சுகாதார துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து, விற்பனைக்காக வைத்திருந்த 15 கிலோ கோழி இறைச்சி, 5 கிலோ ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த இறைச்சி மீது பினாயில் ஊற்றி அழித்தனர். இதேபோல் சோதனைச்சாவடி அருகே உள்ள மளிகை கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட அஜீனமோட்டோ இருப்பதை கண்டறிந்த சுகாதார துறையினர் கடையில் இருந்த 3 கிலோ அஜீனமோட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், கெட்டுப்போன இறைச்சிகளை விற்றால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.


Next Story