திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு
திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு பெற்றுள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில், நாள்தோறும் 100 கணக்கான பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று திடீரென 3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது பத்திரபதிவிற்காக கொண்டு வரப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும் அண்மையில் நடைபெற்று முடிந்த பத்திரப்பதிவுகள் தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த சில நாட்களாக செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கோடி கணக்கிலான பல இடங்கள் பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ள நிலையில், அது தொடர்பான ஆவணங்களையும், பத்திரப்பதிவு செய்தவர்கள் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதைபோல திருச்சி மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.