காஞ்சீபுரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
காஞ்சீபுரத்தை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த கூரம்-வதியூர் சாலையில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் கூரம்-வதியூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயற்சி செய்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் சோதனை செய்ததில், ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 1 கிலோ 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்டவர்களை பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் கூரம் கிராமத்தை சேர்ந்த அஜீத்குமார் (20), ஜனா (20) என்பதும், அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.