2 ஆண்டுகளாக பயிர் காப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடிப்பா?


2 ஆண்டுகளாக பயிர் காப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடிப்பா?
x

2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்ெதாகை வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

மதுரை

2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்ெதாகை வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

பயிர் காப்பீட்டுத்தொகை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா சுவாமிமலை பகுதியைச் சேர்ந்தவரும், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளருமான சுந்தர விமல்நாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கடந்த 2016-ம் ஆண்டில் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கை சீற்றங்கள், நோய் தாக்குதல், வெள்ளம், வறட்சி போன்றவைகளால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகள் சந்திக்கும் நஷ்டங்களை ஈடு கட்டும் வகையில், இந்த திட்டத்தில் பயிர் காப்பீடு செய்தால், உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி 2021-2022, 2022-2023 ஆகிய ஆண்டுகளுக்கு பல்வேறு வங்கிகளில் பயிர் காப்பீடு செய்ய மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டது.

2 ஆண்டுகளாக இழுத்தடிப்பு

இதையடுத்து காவிரி டெல்டா பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்களின் நெல் சாகுபடிக்கு உரிய காப்பீட்டு தொகையை செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு பல்வேறு இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்த ஆண்டும் வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனாலும் இதுவரை எங்களுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் 2 ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றனர்.

எனவே காவிரி டெல்டா பகுதிகள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 2021-22-ம் ஆண்டுக்கான உரிய இழப்பீட்டுத் தொகையை உரிய வட்டியுடன் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.


Related Tags :
Next Story