விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 2 ஆண்டு சிறை
பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா ஜெயங்கொண்டம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செழியன் (வயது 49), விவசாயி. இவர் 29.4.2017 அன்று செஞ்சி தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த நில அளவையரான சங்கர் (48) என்பவரிடம் தன்னுடைய விவசாய நிலத்திற்கு உட்பிரிவு பட்டா மாற்றம் செய்து தரும்படி கோரினார். அதற்கு அவர் லஞ்சம் கேட்டார். இதையடுத்து சங்கருக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சமாக அன்புசெழியன் கொடுத்தார். அந்த பணத்தை சங்கர் வாங்கியபோது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) புஷ்பராணி, குற்றம் சாட்டப்பட்ட சங்கருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.