நகை திருட்டு வழக்கில் வாலிபர்களுக்கு 2 ஆண்டு சிறை; திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு


நகை திருட்டு வழக்கில் வாலிபர்களுக்கு 2 ஆண்டு சிறை; திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு
x

நகை திருட்டு வழக்கில் வாலிபர்களுக்கு 2 ஆண்டு சிறை விதித்து திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர்

திருத்தணி ம.பொ.சி., சாலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தங்கநகை மற்றும் அடகு கடை நடத்தி வருபவர் அசோக்குமார் ஜெயின் (வயது 48). இவர் கடந்த 23-9-2021 அன்று ராஜஸ்தான் சென்றிருந்தார். தான் ஊருக்கு சென்று வரும் வரை கடையை தனது அண்ணன் மகன் நிக்கில்குமாரை (வயது 27) பார்க்க சொல்லி உள்ளார். நிக்கில்குமார் கடையில் இருந்தபோது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தங்கச்சங்கிலி வேண்டும் என்று கேட்டார். நிக்கில்குமார் எடுத்து காட்டினார். அப்போது அந்த நபர் 4 தங்கச்சங்கிலியை எடுத்துக் கொண்டு அங்கு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து நிக்கில்குமார் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நகை கடையில் தங்கச்சங்கிலியை திருடிய ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி பகுதியை சேர்ந்த சிக்காந்தர் (வயது 30), கங்காதரன் (24) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருத்தணி குற்றவியல் கோர்ட்டில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று வாதங்கள் முடிவுற்ற நிலையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் முத்துராஜ் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Next Story