தொழிலாளர்கள் 2 பேர் சாவு எதிரொலி:ரசாயன மருந்து தெளிப்பு குறித்து பயிற்சி:விவசாயிகள் வலியுறுத்தல்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ரசாயன மருந்து தெளிப்பு குறித்து தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு தென்னை, வாழை, திராட்சை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி, கத்திரிக்காய் வெண்டைக்காய், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. இதனால் உழவு பணிகள், களையெடுப்பு, அறுவடை, மருந்து தெளிப்பு ஆகிய பணிகளில் விவசாய கூலித்தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூடலூர் பகுதியில் வயலில் நெற்பயிருக்கு மருந்து தெளித்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இதனால் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், விவசாயிகளுக்கு சாகுபடி குறித்த பயிற்சிகள் வழங்கப்படுவதை போல் ரசாயன மருந்து தெளிப்பது குறித்து தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும். ரசாயன மருந்து தெளிக்கும் எந்திரங்களை அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும், ரசாயன உரம் தெளிக்கும் போது பாதுகாப்பு கவசங்கள் அணிகிறார்களா? பரிந்துரை செய்யப்பட்ட அளவுகளில் மருந்துகள் கலக்கப்படுகிறதா? என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.